மலையகத்தமிழர் - ஒரு சுருக்க வரலாறு
(1823 முதல் 1964 வரை)
இரா. சடகோபன்
சிரேஷ்ட சட்டத்தரணி,
மலையக சமூக ஆய்வாளர்,
எழுத்தாளர்.
1815 ஆம் ஆண்டு வரை இலங்கை கரையோர பிராந்தியத்தில் மாத்திரமே ஆட்சியுரிமை ஆதிபத்தியம் கொண்டிருந்த பிரித்தானிய ஏகாதிபத்தியம் இவ்வாண்டு மலையக ராச்சியத்தின் மன்னனாக விளங்கிய ஸ்ரீ விக்ரம ராஜசிங்கனை தோற்கடித்து கண்டியை கைப்பற்றியதுடன் சிலோன் (Ceylon) என்று அழைக்கப்பட்ட இலங்கை ஒட்டு மொத்தமாக ஆங்கிலேயரின் ஆட்சியின் கீழ் வந்தது. அதன் பின் அவர்கள் இலங்கையையும் தமது மற்றுமொரு குடியேற்ற நாடாக (colony) அழைத்த போதும் மக்கள் அவர்களிடம் அடிமையானார்கள் என்பதுதான் உண்மை.
ஏற்கனவே இலங்கை மீது படையெடுக்கவும் அரசைக் கொண்டு நடத்தவும் என பிரித்தானிய அரசிக்கு பெருந்தொகையான செலவேற்பட்டிருந்தது.
இலங்கையுடனான வர்த்தகத்தில் கறுவா, யானைத்தந்தம், ஏனைய வாசனைத்திரவியங்கள், இரத்தினக்கல் போதிய அளவு அந்நிய செலாவணியை உழைக்க முடியவில்லை. பிரித்தானிய ஏகாதிபத்தியம் ஏற்கனவே மலேசியா, மொறிசியஸ், பிஜி, கிழக்கிந்திய தீவுகள், ஆபிரிக்க நாடுகள் போன்றவற்றில் கரும்பு, பருத்தி, அவுரி (Indico) சிங்கோனா, கொக்கோ, இறப்பர் போன்ற ஏற்றுமதிப்பணப்பயிர்ச்செய்கைகளை ஆரம்பித்திருந்தது. இலங்கையிலும் இவை பரீட்சார்த்தமாக மேற்கொள்ளப்பட்டன. கரும்பு வட, தென் மாகாணங்களில் பயிரிடப்பட்டது. எனினும் மலைநாட்டில் 1823 ஆம் ஆண்டு கண்டி மாவட்டத்தில் கம்பளை என்ற இடத்திற்கருகில் சின்னப்பிட்டி என்ற தோட்டத்தில் 150 ஏக்கர் கோப்பி தோட்டமொன்றை ஹென்றி பேர்ட் (hendry bird) மற்றும் அவரது சகோதரர் ஜோர்ஜ் பேர்ட் (Jeorge Bird) ஆகியோர் இணைந்து அப்போது இலங்கையின் ஆளுனராகக் கடமையாற்றிய எட்வர்ட் பாண்ஸ் (edward Barns) அவர்களின் உதவியுடன் ஆரம்பித்தனர்.
இதனைத் தொடர்ந்து சுமார் பத்து வருட காலத்திலேயே ஆயிரக்கணக்கான ஏக்கர்களிலும் அதன் பின் லட்சக் கணக்கான ஏக்கர்களிலும் கோப்பிச் செய்கை மலை நாட்டுப் பிரதேசத்தில் பெருக ஆரம்பித்தது. அப்போது தான் இத்தகைய தோட்டங்களில் வேலை செய்ய பெருந்தொகையான கூலியாட்கள் தேவைப்பட்டனர்.
உள்நாட்டு சிங்கள மக்களிடம் இருந்து இத்தகைய குறைந்த கூலிக்கு வேலை செய்யும் வேலையாட்களை திரட்ட முயற்சித்தபோது அவர்கள் தம்மை அடிமைப்படுத்தி அடக்கி ஆளும் வெள்ளைக்காரனிடம் வேலை செய்து கை நீட்டி கூலி வாங்குவதை அவமானமாகக் கருதி தோட்டங்களில் வேலை செய்ய முன்வரவில்லை.
அப்போது எங்கிருந்து இத்தகைய கூலியாட்களை திரட்டுவது என்ற கேள்வி எழுந்த போது முதலில் சீனாவில் இருந்து வரவழைப்பதென்றே முடிவெடுக்கப்பட்டது. பின்னர் அது செலவு கூடியது என அறிந்ததும் அருகில் உள்ள தமிழ் நாட்டில் இருந்து கூலியாட்களை கூட்டி வருவதென்று முடிவெடுக்கப்பட்டது. இதற்கென இலங்கையிலும் தமிழ் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் ஏஜென்டுகளும் கங்காணிகளும் நியமிக்கப்பட்டனர். தமிழ் நாட்டின் துறையூர், செங்கல்பட்டு, முசிரி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, சேலம், ஆத்தூர், வேலூர், திருச்சிராப்பள்ளி, அறந்தாங்கி, அரக்கோணம், புதுக்கோட்டை, தஞ்சாவூர், விழுப்புறம் போன்ற இடங்களிலும் மற்றும் பல இடங்களிலும் ஏஜென்சி ஆபிஸ்கள் என்று சொல்லப்படுகின்ற ஆள்பிடிக்கும் நிலையங்கள் நிறுவப்பட்டன.
இந்த நிலையங்கள் வாயிலாகவும் ஏஜென்டுகள், கங்காணிகள் மூலமாகவும் தமிழகமெங்கும் ''கண்டிச் சீமையிலே!'' பொன்னும் மணியும்கொட்டிக்கிடக்கின்றது, தேங்காயும் மாசியும் மண்ணில் விளைகின்றது. தேனும் திணை மாவும் பருப்பும் அள்ள அள்ள குறையாமல் கிடைக்கிறது, யார் வேனுமென்றாலும் அவற்றை அள்ளிக் கொள்ளலாம் என்று பொய் கலந்த பசப்பு வார்த்தைகளும் விளம்பரப்பிரச்சாரங்களும் மேற்கொள்ளப்பட்டன. இதற்கு மேலதிகமாக கண்டியிலே இலட்சக்கணக்கான வேலைவாய்ப்பு கிடைக்கின்றன என்றும் பிரச்சாரம் செய்யப்பட்டன.
எவ்வாறு இவர்கள் பொய்யான வாக்குறுதிகள், ஆசை வார்த்தைகள், பொய் பிரச்சாரங்கள், துண்டுப்பிரசுரங்கள் வாயிலாக நமது முன்னோர்களை ஒரு பாரிய துன்பக்கேணியில் கொண்டு போய் தள்ளினார்கள் என்பதற்கு பின்வரும் விளம்பரங்களும் துண்டுப்பிரசுரங்களும் சான்றாகும்.
இந்தியத் தொழிலாள மக்களை இலங்கைத் தேயிலைத்
தோட்டங்களில் வேலைக்கு அழைத்துச்சென்ற
முறைமை கூறும் வரலாற்று ஆவணத்தில் குறிப்பிட்டவை
1922 மார்ச்சு 1 இல்
திருச்சிராப்பள்ளி சிலோன் லேபர் கமிஷனர்
எச்.எஸ்.நிக்கல்ஸன்
வெளியிட்ட விளம்பரம்
இலங்கையில் இருந்து திரும்பி வரும் கூலிகளின் சௌக்கியத்தைக் கவனிப்பதற்காக கொழும்பில் ஓர் டிப்போ ஏற்படுத்தப்பட்டிருக்கிறது.
Agent: Fort Station, Maradana Station
இலங்கை போக விரும்பும் கூலி ஆட்களுக்கு விளம்பரம்
நீர் இலங்கைக்குக் போக வேண்டுமானால் உன்னுடைய கிராமம் அல்லது அதைச்சேர்ந்த ஜில்லாவில் உள்ள ஒரு கங்காணியிடம் போக வேண்டும். யாதொரு கங்காணியையும் உனக்குத் தெரியாவிட்டால் உன் கிராமத்துக்கு அருகாமையில் உள்ள மேற்கண்ட டிப்போக்களில் ஒன்றுக்கு நீர் நேரில் ஆஜராகியாவது காகிதத்தின் மூலமாவது சகல விவரங்களும் தெரிந்து கொள்ளலாம். தங்கள் சுயநலத்தைக்கருதி உன்னைச் சிலோனுக்குப் போக வேண்டாம் என்று தடுக்கிறவர்களின் பேச்சைக் கேட்காதே. உன்னுடைய சொந்தக்காரர்கள் யாராகிலும் சிலோனுக்கு போயிருந்து அவர்களைப் பற்றிய சமச்சாரங்கள் யாதேனும் தெரிந்து கொள்ள வேண்டுமானால் அவர்கள் எந்த ஏஜென்சியில் எப்பொழுது பதிவு செய்யப்பட்டவர்கள் என்றும் எந்தத்தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருக்கிறார்கள் என்றும் தெரியப்படுத்தி அவர்களிடம் இருந்து வந்திருக்கும் கடிதத்தை லக்கோடாவுடன் திருச்சிராப்பள்ளி சிலோன் லேபர் கமிஷனர் துரை அவர்களுக்கு அனுப்பினால் உனக்கு அவர் வேண்டிய உதவி செய்வார்.
சிலோன் தோட்டங்களின் நிலவரங்களைப் பற்றியும் அங்கே வேலை செய்து வருகிற ஆட்களின் நிலைபற்றியும் பலவிதமாக பொய்யான சமாச்சாரங்கள் சொல்லப்பட்டு வருகின்றன.போதுமான ஆட்கள் ஏற்கனவே இருக்கின்ற தோட்டங்களுக்கு வேறு ஆட்கள் வேண்டாம் என்பது மெய்தான். ஆனால் சுகம் உள்ளதும் குளிர்ச்சியும் உள்ள மலைப்பிரதேசங்களில் உள்ள தேயிலைத்தோட்டங்களுக்கு ஏராளமான கூலி ஆட்கள் வேண்டியதாய் இருக்கிறது. இந்தத்தோட்டங்களில் ஒவ்வொரு கூலியாட்களும் வாரந்தோறும் பட்டணப்படி ஒன்றுக்கு 5 அணா வீதம் போதுமான அரிசி வாங்கிக் கொள்ளலாம். வேலைக்குத் தகுந்தபடி கூலி கொடுக்கப்படும். தேயிலைப்பயிர் செய்யப்பட்டு நல்ல வியாபாரம் நடந்து வருகிறபடியால் அந்தத்தோட்டங்கள் அதிக செழிப்பான ஸ்திதியில் இருக்கின்றன.
சிலோன் தோட்டங்களில் ஒரு ஆண், ஒரு பெண் வேலை செய்யக்கூடிய இரண்டு பிள்ளைகள் அடங்கிய ஒரு குடும்பம் அடியிற்கண்ட சம்பளம் ஒரு நாளையில் சம்பாதிக்கலாம்.
ஆண் 0-7-0 அணா முதல் 0-11-0 அணா வரையிலும் பெண் 0-5-6 அணா முதல் 0-13-0 அணா வரையிலும் இரண்டு பிள்ளைகள் 0-8-0 முதல் 0-12-0 அணா வரையிலும்...ரூ.1-4-6 ரூ, 2-4 நன்றாய் வேலை செய்யக்கூடிய ஒரு குடும்பம் ஒன்றுக்கு 2-4-0 சம்பாதிக்கலாம். அதாவது 6 நாட்கள் கொண்ட ஒரு வாரத்துக்கு ரூபா 13-8-0 அல்லது ஒரு மாதத்திற்கு 54-0-0 சம்பாதிக்கலாம். இதைத் தவிர ஞாயிற்றுக்கிழமைகளில் வேலை செய்யும் கூலிகளுக்கு இதர சம்பளம் கொடுக்கப்படும்.
மேற்கூறிய குடும்பத்திற்கு மாதத்திற்கு சாப்பாட்டுச்செலவுக்கும் துணிமணி செலவுக்கும் ரூபா 38 போதுமானது. பாக்கி ரூபா 19 மாதம் மீர்த்து வைக்கலாம். ஒரு மாதக் கெடுவு அல்லது நோட்டிஸ் கொடுத்து கூலிகள் தாங்கள் வேலை செய்யும் தோட்டத்தை விட்டு விலகி தங்கள் இஷ்டப்படி வேறு எந்த வேலைகளிலும் அமர்ந்து கொள்ளலாம்.
சிலோன் லேபர் கமிஷன் ஹெட் ஆபீசு திருச்சிராப்பள்ளி கூலிகளைப் பதிவு செய்வதற்காக ஏற்படுத்தியிருக்கும் ஏஜென்சி ஆபிசுகள் துறையூர், செங்கல்பட்டு, முசிரி, நாமக்கல், திண்டுக்கல், மதுரை, திருநெல்வேலி, சேலம், ஆத்தூர், வேலூர், திருச்சிராப்புள்ளி, அறந்தாங்கி, அரக்கோணம், புதுக்கோட்டை, தஞ்சாவூர் , விழுப்புரம்.
சிலோனுக்கு யாரும் போகலாம். எவ்வித நிபந்தனையும் உடன்படிக்கையும் கிடையாது. சிலோனின் உள்ள இறப்பர்த் தேயிலைத் தோட்டங்களில் 6 இலட்சம் கூலியாட்கள் வேலை செய்து வருகிறார்கள். அவர்கள் அவ்விடத்தில் சௌக்கியமாயும் சந்தோசமாயும் இல்லா விட்டால் இவ்வளவு பேர்கள் இருந்து வேலை செய்து வருவார்களா என்பதை நீங்களே யோசித்துப்பாருங்கள்.
இலங்கைத் தீவானது தூரதேசம் அல்ல அந்நிய தேசமும் அல்ல. புண்ணியஸ்தலமாகிய இராமேஸ்வரத்தில் இருந்து 2 மணி நேரப்பிரயாணம்தான். தனுஷ்கோடியில் இருந்து தலைமன்னார் வரையில் 1½ மணி நேரம். கப்பலிலும் தலைமன்னாரிலிருந்து தோட்டம் போகும் வரையிலும் ரயில் வண்டியிலும் பிரயாணம் செய்ய வேண்டும்.
இலங்கைத்தோட்டங்களுக்குப் போக வேண்டுமானால் கையில் பணம் வேண்டியது இல்லை. கூலிகளுக்குத் தங்கள் கிராமங்களில் இருந்து தோட்டம் போய்ச் சேரும் வரையில் ஏற்படும் செலவு சிலோன் லேபர் கமிசன் மூலமாகக் கொடுக்கப்படும். தோட்டத்தில் தங்கி வேலை செய்வார்களேயாகில் அநேகத் தோட்டங்களில் இந்த செலவுகளைக் கூலிகளிடம் இருந்து வசூலிப்பதில்லை.
சிலோன் கூலியாட்கள் தோட்டங்களுக்குப் போகிறபொழுதும் இதைச்சற்று நிதானித்து மறுபடியும் யோசித்துப்பாருங்கள். சிலோன் தோட்டங்களில் தவறாமல் ஒவ்வொரு நாளும் வேலை கிடைக்கும். நல்ல சம்பளம் கிடைக்கும். சம்பாதித்த பணத்தைச்சுப்பிரண்டு துரைமார்களே உங்கள் கையில் கொடுப்பார்கள்.
அதிகமாய்ச் சம்பாதிக்க விரும்புகிறவர்கள் ஞாயிற்றுக்கிழமைகளிலும் தினம் குறிப்பிட்ட நேரத்துக்கு மேல் வேலை செய்தால் அதிகம் சம்பளம் சம்பாதிக்கலாம்.
சிலோன் கவர்மெண்டார்களும் தோட்டக்கூலிகள் திரேக சௌக்கியத்தோடும் மற்ற சௌகரியங்களோடும் ஜீவிக்க வேண்டும் என்று வற்புறுத்தி அது விஷயமாய் வெகு கவலையுடன் விசாரணை செய்து வருகிறார்கள். ஒவ்வொரு தோட்டத்திலும் அல்லது அருகாமையிலும் கைதேர்ந்த டாக்டர்களும் ஆஸ்பத்திரிகளும் உண்டு.
வியாதியஸ்தர்களுக்கு தருமமாக மருந்து கொடுத்து வெகு கவலையோடும் போய்ச்சேர்ந்த பிறகும் அவர்களுடைய சௌகரியங்களைக் கவனிக்கும் படியாகவே லேபர் கமிசன் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றது.
சிலோன் லேபர் கமிசன் ஏஜண்டு ஆபீசில் கூலியாட்கள் வந்து சேர்ந்ததும் அவர்களைச் சாக்கிரதையாகக் கவனித்து அவர்கள் சாதி ஆச்சாரப்படி சாப்பாடு கொடுக்கப்படும். ஏஜண்டு ஆபீசிலிருந்து இலங்கை போய்ச் சேரும் வரையில் எந்தவிதமான தொந்தரவுகளும் அசௌகரியங்களும் ஏற்படாதபடி பியூன்கள் கூட்டிக் கொண்டு போவார்கள். சிலோனுக்கு போயிருக்கும் கூலிகளின் பந்துக்கள் அவர்களுக்குக் கமிஷன் டிப்போ, ஆபிசுகள் மூலமாகக் கடிதம் எழுதலாம். கூலிகளை இந்தியாவுக்குத்திருப்ப அழைத்துக்கொள்ள வேண்டுமானாலும் ஆபிசுக்கமிசனர் வேண்டிய உதவி செய்வார். வேலைக்கு வேண்டிய ஆயுதங்கள், கூடைகள் போன்ற மற்ற சாமான்களும் கிரயமில்லாமல் தோட்டத்திலே கொடுப்பார்கள்.
குடியிருக்க வீடும் சமையலுக்கு வேண்டிய விறகுகளும் காய், கறிகள், பயிர் செய்ய விதைகளும் இலவசமாய் அளிக்கப்படும். ரப்பர் தோட்டத்திலும் குடிப்பதற்கும் உபயோகிப்பதற்கும் சுத்தமான நல்ல தண்ணீர் கிடைக்கும். அரும் கோடையில் கூட தண்ணீர் கிடைக்கும். கூலிகள் யாதொரு விக்கினமுமின்றி அவரவர் மதாச்சாரப்படி தங்கள் திருவிழாக்களையும் வேத சடங்குகளையும் அனுசரிக்கலாம். அநேக தோட்டங்களில் கோவில்களும் உண்டு.
இதைக் கவனமாய் வாசியுங்கள். அரிசி ஆண்களுக்கும் பெண்களுக்கும் பிள்ளைகளுக்கும் தவறாமல் தோட்டத்துரைமார்களாலேயே கொடுக்கப்படும். அப்படிக் கொடுக்கப்படும் அரிசி நல்லதாயும் குறைந்த விலை உள்ளதுமாய் இருக்கும். அரிசியே இந்திய சனங்களுக்கு உணவாய் இருப்பதால் அதைக்குறைந்த விலைக்குக் கூலிகளுக்குக் கொடுப்பதால் ஏற்படும் நட்டத்தைத் தோட்டக்காரர்கள் ஏற்றுக்கொள்கிறார்கள். தவிர வியாதியஸ்தர்களுக்கும் பிரசவ காலத்தில் ஸ்தீரிகளுக்கும் அரிசி இனாமாய்க் கொடுக்கப்படும்.
கூலியாட்களின் பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடங்கள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. வேலை செய்யும் காலங்களில் கைக்குழந்தைகளைத் தூங்க வைப்பதற்கு அநேக தோட்டங்களில் தொட்டில்கள் இருக்கின்றன.
தொட்டிலில் தூங்கும் பிள்ளைகளைப் பார்த்துக் கொள்ள நம்பிக்கை உள்ள பெண் பிள்ளை நியமிக்கப்படுவர்.
சிலோனுக்குப் போனால் இனத்தார்களையும் சிநேகிதர்களையும் பார்க்க இந்தியாவுக்கு வர முடியாது என்று நினைக்காதே. வேண்டுமான போது எல்லாம் ரஜா எடுத்துக்கொண்டு வரலாம். வருசா வருசம் ஆயிரக்கணக்கான கூலியாட்கள் இந்தியாவுக்கு வந்து போகிறார்கள். அப்படி வர இருக்கும் சனங்களை நீ உன்னுடைய கிராமத்தில் பார்க்கலாம். தோட்டத்தில் இருந்து இந்தியாவுக்கு வரும் கூலியாட்களை கவனிக்கவும் அவர்களுக்குச் சாப்பாடு வழிச்செலவும் கொடுப்பதற்காகவே கொழும்பில் ஓர் டிப்போ ஏற்படுத்தப்பட்டு இருக்கின்றது.
காகிதம் எழுதுவதற்கு வேண்டிய கடதாசிகளும் பேனாக்களும் துரைமார்கள் தோட்டத்தில் கொடுப்பார்கள். எழுதத் தெரியாதவர்களுக்கு றயிட்டர்மார்கள் காயிதம் எழுதிக் கொடுப்பார்கள். கடைகள் பக்கத்தில் இல்லாத தோட்டங்களில் கூலிகளால் தோட்டங்களிலேயே சில்லறைக் கடைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன.
தங்களுக்கு வேண்டிய எல்லா சாமான்களும் சரியான விலைக்கு வாங்கிக் கொள்ளலாம். துரைமார்கள் கடைகளை மேல்பார்த்து கடைக்காரர்கள் அதிக விலைக்கு விற்காதபடி பார்த்துக்கொள்வார்கள். தவிர பிரசவமான ஸ்திரிகள் வேலை செய்யக்கூடிய வரையில் அரிசி இலவசமாக கொடுக்கப்படும்.
தோட்டத்துரைமார்களுக்குத் தமிழ் தெலுங்கு முதலிய பாஷைகள் தெரியும். ஆதலால் அவர்களிடம் நேரில் கூலிகள் பேசலாம். தங்கள் குறைகளையும் அவர்களிடம் நேரில் சொல்லிக்கொள்ளலாம். அப்பொழுது அவர்கள் அவைகளுக்குப் பரிகாரம் செய்ய எப்பொழுதும் தயாராய் இருப்பார்கள்.
புதிதாய்த் தோட்டத்திற்கு வரும்போது அவர்களுக்கு வேண்டிய சமையல் பாத்திரங்கள் கொடுக்கப்படும். அவசரமாய் வேண்டிய மற்றச் சாமான்கள் வாங்கப்பணம் அட்வான்ஸாகக் கொடுக்கப்படும்.
சிலோனுக்குப் போவது முதல் கூலிகளுக்கும் அவர்கள் குடும்பஸ்தர்களுக்கும் நன்மைகளை நன்றாக யோசித்து பாருங்கள். ஒழுங்கான வேலை. நல்ல சம்பளம். தவறாமல் அரிசி சப்ளை. குடியிருக்க நேர்த்தியான வீடு என்பன கொடுக்கப்படும்.
சிலோனுக்குப் போக விரும்பும் கூலிகள் இன்னும் அறிந்து கொள்ள வேண்டிய வேறு விசயங்கள் இருக்குமானால் இந்த நோட்டிஸ் கொடுத்தவரையாவது அல்லது கிராமங்களுக்கு வரும் அந்தக்கமிசனைச்சேர்ந்த துரைமார்களையாவது கிராமத்திற்குச் சமீபத்தில் உள்ள ஆபிசில் ஆவது போய்க் கேட்டு அறிந்து கொள்ளலாம்.
கோப்பிக்காலம்
இலங்கையில் கோப்பிக்கால வரலாறு 1823-1893 வரையிலாகும். 1870 களை அடுத்து வந்த தசாப்தத்தில் கோப்பிப்பயிர்ச் செய்கையில் ஹெமிலியா வெஸ்டாரிக்ஸ் (Hemiliya vestrarixs) என்ற பங்கசு நோய் பரவி படிப்படியாக கோப்பிப்பயிர்ச் செய்கையை முற்றாகத்தாக்கி 1893 ஆம் ஆண்டளவில் கோப்பி படிப்படியாக அற்றுப்போனது.
கோப்பி படிப்படியாக அழிந்து போகும் என்பதை அறிந்த மாத்திரத்தில் தேயிலை பயிர்ச் செய்கை படிப்படியாக அறிமுகமாகி விஸ்தரிப்படைந்தது. தேயிலையை முதல் முதல் அறிமுகப்படுத்தியவர் ஜேம்ஸ் டெய்லர் என்ற (James Tailor) என்ற தோட்டத்துரையாவார்.
இலங்கையில் கோப்பிப் பயிர்ச்செய்கை ஆரம்பிக்கப்பட்டு சுமார் 50 வருடங்களில் சுமார் 30 இலட்சம் பேர் கூலிகளாக தமிழ் நாட்டுப் பிரதேசங்களில் இருந்து வந்து வேலை செய்து விட்டு திரும்பிப் போயுள்ளனரென சிலோன் ஒப்சேர்வர் பத்திரிகையின் ஆசிரியர் ஜோன் பெர்குசன் (John Ferguson) ஒரு முறை தனது பத்திரிகைச்செய்தியில் குறிப்பிட்டுள்ளார். இவர்கள் மிகக் குறைந்த கூலிக்கு மிக உச்ச உழைப்பை வழங்க வல்லவர்கள் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
தொழிலாளர்களை கசக்கிப்பிழிந்து அவர்கள் செய்த வேலைக்கு சொற்ப சல்லிக்காசுகளையே அவர்களுக்குக் கொடுத்ததற்கு அவர்கள் தெரிவித்த காரணம் சொந்த ஊரில் இருந்திருந்தால் அது கூட அவர்களுக்குக் கிடைத்திருக்காது என்பதாகும்.
அவர்களுக்கு வருட ஊதியமாக மூன்று அல்லது நான்கு பவுண்களே செலவானது. அதே சமயம் ஒரு பொலிஸ்காரனுக்கு 18 - 24 பவுண்கள் வேதனமாக வழங்கப்பட்டது. அவர்கள் அந்த சொற்ப காசுக்கு ஏன்
இத்தனை தூரம் கால் நடையாக வந்து பல்வேறு மரண இன்னல்களுக்கு மத்தியில் துன்ப துயரங்களை சகித்துக்கொண்டு தம் உழைப்பை விற்றனர் என்பதற்கு ஆய்வாளர்கள் பல காரணங்களைக்கூறுகின்றனர். ஒன்று வரட்சியும் பஞ்சம் பட்டினியும். அதனால் மனிதர்கள் கூட்டம் கூட்டமாக மாண்டொழிந்து போனமை. மற்றையது சாதிக்கொடுமை. அடக்கு முறை தீண்டாமை என்பன தலை விரித்தாடி மக்களை கொடுமைப்படுத்தியமை. இவற்றில் இருந்து தப்புவதற்கும் தாம் அடகு வைத்த நிலபுலன்களை மீட்கவும் பலரும் கண்டிச் சீமைக்கு வந்துள்ளனர்.
பட்ட துன்பங்கள்
மெட்ராஸ் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் கீழ்க்கரைகளில் அமைக்கப்பட்டிருந்த தொழிலாளர்களை இலங்கைக்கு அனுப்பும் நிலையங்களுக்கு கால் நடையாகவே வரவேண்டியிருந்தது. வரும் வழியெல்லாம் பஞ்சம் பட்டினி தலைவிரித்தாடியது. அவர்கள் வசதியான படகுகளிலோ கப்பல்களிலோ அழைத்து வரப்படவில்லை. நூறு பேர் வரவேண்டிய படகில் 200 பேர் ஏற்றப்பட்டனர். இது தொடர்பில் கருத்துத்தெரிவித்த இலங்கையின் புகழ் பெற்ற அமெரிக்க மதவாதியான கர்னல் ஹென்றி ஸ்டீல் ஒல்கொட் (Hendry Steel Olcot) கூலிகள் டின்னில் அடைக்கப்பட்ட புழுக்களை போல் கொண்டு வரப்பட்டனர் என்று ஒரு முறை குறிப்பிட்டுள்ளார்.
தலைமன்னாரில் இருந்து கண்டிக்கு வரும் 131 மைல் பாதை இலகுவாக நடந்து வரக்கூடிய பாதை அல்ல. அடர்ந்த காட்டிலும் மலைகளில் ஏறியும் பள்ளங்களில் இறங்கியும் நடக்கும் பாதையில் பாதி உயிர் போய்விடும். எஞ்சியிருப்போரை பாம்புகளும் கரடி, புலி, சிங்கமும் பிடித்துத்தின்னும். தண்ணீர் கிடைக்காது. இராத்தங்க முடியாது. அதற்கு மேல் கொலராவும் மலேரியாவும் வேறு வகைக் காய்ச்சல்களும் உயிரைக்காவு கொள்ளும். ஒரு பக்கம் கடும் மழை. வெய்யில். குளிர். இரத்தம் குடிக்கும் அட்டைகள். கிடைக்கும் சொற்ப காசையும் கொள்ளையடிக்கும் சமூக விரோதக் கும்பல்கள். இப்படி அவர்கள் கண்டியை அடையும் போது பாதிப்பேர் இறந்து போவார்கள். இதனை அறிந்து வைத்திருந்த கங்காணிகளும் தரகர்களும் தேவைப்பட்டது 150 பேர்களாயின் 300 பேரை அழைத்துப்போவார்கள். மிகுதி 150 பேரை செல்லும் வழியில் பலி கொடுப்பார்கள்.
எனவே இவர்கள் எங்கு சென்ற போதும் மரணமும் பத்தடி தள்ளி பின்னாலேயே சென்றது.
டொனோவன் மொல்ட்ரிச் (Donovan Moldrich) என்பவரின் பிட்டடர் பெர்ரி பொண்டேஜ் என்ற ஆய்வு நூலின் படி கோப்பிக்காலமான மேற்படி 70 ஆண்டுகளில் இயற்கை மரணத்துக்கு அப்பால் பிரதானமாக கொலரா நோயாலும் மற்றும் வேறு நோய்களாலும் பசி பட்டினி, தாங்க முடியாத குளிர் காரணமாகவும் சுமார் இரண்டு லட்சத்து நாற்பதாயிரம் பேர் தம்முயிரை கோப்பியின் செழிப்பான வளர்ச்சிக்கு அர்ப்பணித்துள்ளனர் என்பது பதிவிடப்பட்டுள்ளது.
தேயிலைக்காலம்
தேயிலைக்காலம் மலையக மக்களுக்கு கோப்பிக் காலத்தைப்போலவே மற்றும் ஒரு மரணப்பொறியாகவே அமைந்தது. கோப்பிப் பயிர் செய்கைக்குப் பதிலாக தேயிலை என்பது பதிலீடு செய்யப்பட்டதே அன்றி மானிடவியல் மற்றும் வாழ்க்கை அம்சங்களில் எந்தவிதமான முன்னேற்றகரமான மாற்றங்களையும் அது கொண்டு வரவில்லை.
தோட்டத்துரைமாரின் கடுமையான அடக்கு முறைக்குக் கீழும் கங்காணிமார்களின் துண்டு முறை நிதிக்கொடுக்கல் வாங்கல்கள் நிர்வாக முறையின் கீழும் முற்றாக கொத்தடிமைகளாகவே தொழிலாளர்கள் வாழ்ந்தனர். துண்டுச்சீட்டில் எழுதி மேலும் மேலும் தொழிலாளர்களுக்கு பொய்க்கணக்கின் மீது கடன் கொடுத்து கண்காணிமார் தொழிலாளரை அடிமைப்படுத்தி வைத்திருந்தனர். கடன் சுமை தாங்க முடியாமல் வேறு தோட்டங்களுக்கு ஓடிவிடாமல் தடுப்பதற்காக பத்துச்சீட்டு முறை ஒன்றை கடைப் பிடித்து அந்தப் பத்துச் சீட்டை (பற்றுச் சீட்டு ) தடுத்து வைத்துக் கொண்டதுடன் கடுமையான சட்ட திட்டங்களும் அமுல் படுத்தப்பட்டன. அநேகமாக தொழிலாளர்களுக்கும் துரைமார்களுக்கும் இடையிலான இடைத்தரகர்களாகவும் தொடர்பு ஊடகமாகவும் இவர்கள் செயற்பட்டதால் இரண்டு தரப்பினரையும் இவர்கள் நயவஞ்சமாக சுரண்டினர்.
ஆள்பிடித்துத் தருவதற்கென தலைக்கு இவ்வளவென கொமிஸன் பணம் பெற்ற இவர்கள் தொழிலாளர்களை கொண்டு வர ஆன செலவினை தொழிலாளர் செலுத்த வேண்டிய கடன் தொகையிலும் சேர்த்துக் கொண்டனர். அதே சமயம் துரைமாரிடம் தொழிலாளர்களுக்கு செலுத்தவென வாங்கிய முற்பணத்தில் அரைவாசியைக்கூட அவர்களுக்குக் கொடுக்காது சுருட்டிக்கொண்டனர். இவ்விதம் நடைமுறைப்படுத்தப்பட்ட துண்டு முறை காரணமாக தொழிலாளரால் எந்த ஒரு சந்தர்ப்பத்திலும் கடன் சுமையில் இருந்து மீள முடியாதிருந்தது. ஆதலால் தொழிலாளர்கள் கடனாளிகளாகப் பிறந்து கடனாளிகளாக வாழ்ந்து கடனாளிகளாகவே மரணித்தனர். இந்த துண்டு முறையால் கங்காணிமார்களே பெரும் நன்மையடைந்தனர். இம்முறை 1921 ஆம் ஆண்டு வரை நடைமுறையில் இருந்தது.
துண்டு முறை, பத்துச்சீட்டு வழங்கும் முறை, தோட்டங்களுக்குள் வெளியார் பிரவேசிப்பதைத் தடுத்தல், எப்போதும் நிர்வாகத்தின் கண்காணிப்பின் கீழ் வைத்திருத்தல் போன்ற இறுக்கமான நடவடிக்கையின் மூலம் இவர்கள் ஒரு திறந்தவெளி சிறைச்சாலைக்குள் இருப்பது போலவே வாழ்ந்தனர். இத்தகைய காவல் கட்டுக்கோப்புக்காரணமாக இவர்கள் ஏனைய சமூகங்களிடமிருந்து தனிமைப்படுத்தி வைக்கப்பட்டிருந்தனர்.
இவர்களை மேலும் துன்பப்படுத்திய அம்சங்களாக தோட்டங்களில் காணப்பட்ட மோசமான சுகாதார நிலைமை, காலை ஐந்து மணிமுதல் மாலை வரையிலான நீண்ட நேர வேலை, கல்வி மற்றும் ஏனைய எந்த வாழ்க்கை வசதிகளும் செய்து கொடுக்கப்படாமை என்பவற்றைக் குறிப்பிடலாம். 1918ஆம் ஆண்டு 14 வயதுக்குட்பட்ட தோட்டத் தொழிலாளரின் பிள்ளைகள் அனைவரும் கட்டாயம் பாடசாலை செல்ல வேண்டும் என ஒரு சட்டம் கொண்டுவரப்பட்ட போதும் அச்சட்டம் இவர்கள் கல்வியறிவு பெற வேண்டும் என்ற நல்ல நோக்கத்தைக் கொண்டிருக்கவில்லை என்றும் பிள்ளகளை வீட்டில் பராமரிப்பதற்கும் சுகவீனமுற்ற போது பிள்ளைகளை கவனிக்கவென வீட்டுப் பெண்கள் வேலைக்கு செல்லாமல் விடுவதை தடுப்பதற்குமே இச் சட்டம் கொண்டுவரப்பட்டதாக ஆய்வாளர்கள் கருதுகின்றனர்.
ஒவ்வொரு தோட்டமும் ஒரு வகையில் இராணுவ கட்டுக் கோப்புடன் கூடிய சிறைக்கூடங்களாகவே இருந்தன. இந்த நிலை 1930 கள் வரை நீடித்தது. 1910 களை அடுத்து வந்த தசாப்பத்தில் இலங்கையில் ஒரு பலமான தொழிற்சங்க இயக்கம் உருவானது.
இலங்கை துறைமுகம், ரயில்வே திணைக்களம், தபால் சேவைத் தொழிலாளர்கள் ஏ.ஈ.குணசிங்க என்ற தொழிற்சங்க தலைவரின் கீழ் இணைந்து தொழிற்சங்க இயக்கத்தை கட்டி எழுப்பினர். அவர்கள் சில வேலைநிறுத்தங்களையும் வெற்றிகரமாக மேற்கொண்டனர். இத்தொழிற்சங்க இயக்கத்தில் கோதாண்டராமய்யர் நடேசய்யர் என்ற இந்தியாவின் தமிழ்நாடு தஞ்சாவூரைச் சேர்ந்த தொழிற்சங்கத் தலைவரும் முக்கிய பங்கேற்றார்.
பின் 1920களில் ஏற்பட்ட பஞ்சம், பட்டினி, பொருளாதார மந்த நிலை என்பன ஏற்பட்ட போது ஏ.ஈ.குணசிங்க துறைமுகம், ரயில்வே திணைக்களம், தபால் திணைக்களம் என்பவற்றில் கடமையாற்றிய தமிழ் மற்றும் மலையாள தொழிலாளர்களுக்கு எதிராக செயற்பட்டு இனவாதப் போக்கை கடைப்பிடித்ததால் கோ. நடேசய்யர் ஏ.ஈ குணசிங்கவிடம் முரண்பட்டு தொழிற்சங்க இயக்கத்தில் இருந்து விலகி மலையகம் நோக்கி சென்று அட்டனை மையமாக வைத்து தொழிற்சங்க இயக்கத்தைத் தோற்றுவித்தார். அதில் அவரது பாரியார் மீனாட்சியம்மையும் இணைந்து கொண்டார்.
ஏற்கனவே 1920 களைத் தொடர்ந்து இலங்கையில் தொழிலாளர் ஒடுக்கு முறை தொடர்பான விழிப்புணர்வு ஒன்று ஏற்பட்டிருந்தது. அதற்கு 1917 ஆம் ஆண்டின் ரஷ்யாவின் மாபெரும் ஒக்டோபர் புரட்சியும் ஒரு காரணம். ரஷ்யாவின் கம்யூணிச சமவுடமைக்கொள்கைகள் இலங்கையிலும் அறிமுகமாகி இருந்தன. மலையக தோட்டத்தொழிலாளர் மத்தியில் துண்டு முறை பத்துச் சீடடு முறை ஒழிக்கப்பட்டு புதிய தொழிலாளர் சட்டங்கள் அறிமுகமாகி இருந்தன. தோட்ட நிர்வாகத்தின் இராணுவக் கட்டுக்கோப்பிலான அடக்கு முறை நிர்வாகம் சற்றே தளர்ந்திருந்தது.
இதற்கிடையில் நாடெங்கும் ஏற்பட்டிருந்த அரசியல் மாற்றங்களுக்கமைய இந்திய தமிழருக்கும் தேர்தல்களில் வாக்களிக்கும் வாய்ப்புக் கிடைத்தது. 1924 ஆம் ஆண்டு இலங்கையில் குடியேறியிருந்த இந்தியத்தமிழர்களின் தொகை 786 000 ஆகும். இதில் 6 10 000 பேர் மலையகத்தில் வாழ்ந்தனர். இவர்களில் வாக்களிக்க 12 901 பேருக்கு தகுதியிருந்தது. இதன் பிரகாரம் 27 செப்டெம்பர் 1925 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் ஐ.எக்ஸ்.பெரேராவும் மொகமட் சுல்தான் என்பவரும் வெற்றி பெற்றனர். அதற்கு அடுத்த வருடம் இடம்பெற்ற தேர்தலில் ஐ.எக்ஸ். பெரேராவும் கோ. நாடேசய்யரும் கூட சட்ட சபைக்குத்தெரிவு செய்யப்பட்டனர்.
ஆனால் 1939 களின் பின்னரேயே மலையக தொழிற்சங்கங்கள் தோன்றவாரம்பித்தன. இதன் முன்னோடியாக கோ.நடேசய்யரே திகழ்கின்றார். இவர் பல்வேறு பணிகளின் நிமித்தம் மலைய தோட்டங்களுக்கு விஜயம் செய்தபோது அங்கே தொழிலாளர்கள் அடிமைப்படுத்தப்பட்டு பல்வேறு அடக்கு முறைகளுக்கு உட்படுத்தப்படுவதை அவதானித்தார். முதல் தடவையாக வேலை நேரத்தை ஒழுங்குபடுத்துவதில் ஈடுபட்டனர். மற்றும் பல்வேறு சட்டதிட்டங்களை தொழிலாளர் நலன் கருதி ஏற்படுத்தி தோட்டத்துரைமார் சங்கத்துடன் பேச்சுவார்த்தைகள் பலவற்றை நடத்தினார். இக்கால கட்டத்திலேயே இவரது தொழிற்சங்கமான இலங்கை இந்திய தொழிலாளர் சம்மேளனம் உருவானது.
இதே கால கட்டத்தில்தான் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேரு அவர்கள் இலங்கைக்கு விஜயம் ஒன்றை மேற்கொண்டு 1939 -1940 களில் கொழும்பில் இயங்கிய பல்வேறு சிறு சிறு சங்கங்களையெல்லாம் ஒன்றுபடச் செய்து அரசியல் ரீதியாக செயற்படுவதற்கென இலங்கை - இந்திய காங்கிரஸ் என்ற அமைப்பைத் தோற்றுவிக்கச் செய்தார். இது பின்னர் அரசியல் கட்சியாகவும் மலையக தொழிற்சங்கமாகவும் செயற்படத் தொடங்கியது.
இவற்றிற்கு முன்னோடியாக 1931 ஆம் ஆண்டு பொதுத்தேர்தலில் வாக்களிக்க இந்தியத் தமிழர் 100 000 பேர் தகுதி பெற்றிருந்தனர். மலையக மக்கள் சார்பாக 5 தேர்தல் தொகுதிகளில் போட்டியிட்ட இவர்களில் 3 பேர் வெற்றி பெற்றனர். ஹட்டன் தொகுதிக்கு போட்டியின்றி தெரிவு செய்யப்பட்ட திரு பெரி சுந்தரம் 1935 ஆம் ஆண்டுவரை கைத்தொழில் அமைச்சராக செயற்பட்டார். இவரைத் தவிர தலவாக்கொல்லையில் எஸ்.பி.வைத்தியலிங்கம் மாத்தளையில் எஸ்.எம். சுப்பையா நுவரெலியாவில் கே.பி.இரத்தினம் ஆகியோரும் வெற்றி பெற்றனர்.
அடுத்து வந்த தேர்தலில் இந்த போக்கு மேலும் அபிவிருத்தியடைந்தது. கோ. நாடேசய்யரின் இலங்கை இந்திய தொழிலாளர் சம்மேளனமும் எஸ்.தொண்டமான் தலைமையில் இயங்கிய இலங்கை இந்திய காங்கிரசும் 1947 ஆண்டு தேர்தலுக்கு தம்மை தயார் செய்தனர். எனினும் இந்த தேர்தலில் கோ.நாடேசய்யரால் வெற்றி பெற முடியவில்லை. ஆனால் இலங்கை இந்திய காங்கிரஸ் இலங்கை இடது சாரிகளுக்கு ஆதரவளித்து அமோக வெற்றி பெற்றது. அதன் பிரகாரம் எஸ். தொண்டமான் ஆர்.ராஜலிங்கம், எஸ்.பி.வைத்தியலிங்கம், பி.ராமானுஜம் ,சி.வி.வேலுப்பிள்ளை, எஸ்.எம்.சுப்பையா, வி.கே வெள்ளையன் ஆகிய ஏழு பேர் பாராளுமன்றத்துக்கு தெரிவு செய்யப்பட்டனர்.
இந்த எழுச்சியை இலங்கையில் பேரினவாத்தால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அப்போது ஆட்சியில் இருந்த ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் அடுத்த வருடமே இந்திய வம்சாவளியினரின் பிரஜா உரிமை பறிப்புச் சட்டம் மற்றும் வாக்குரிமையை இல்லாதொழிக்கும் சட்டம் ஆகிய இரண்டு சட்டங்களையும் கொண்டு வந்து இம்மக்களின் பிரஜா உரிமையையும் வாக்குரிமையையும் பறித்தனர். இதற்கென இலங்கை பிரஜா உரிமைகள் சட்டம் 1948 இதிய பாகிஸ்தானியர் வதிவிடச் (பிரஜா உரிமை) சட்டம் 1948 என்ற இரண்டு சட்டங்கள் கொண்டு வரப்பட்டு இந்தியத் தழிழருக்கு எதிராக நிறைவேற்றப்பட்டன. இதில் முதலாவது சட்டம் ஒரே ஒரு மேலதிக வாக்கிலேயே நிறைவேற்றப்பட்டது. அந்த ஒரு வாக்கினை அப்போது பதவி வகித்த ஜி.ஜி.பொன்னம்பலமே அளித்து இந்திய வம்சாவளி மக்களுக்கு துரோக மிழைத்தார். இவர் இத்தகைய ஒரு துரோகமொன்றை இந்திய மக்களுக்கு செய்ய மாட்டேன் என்று ஏற்கனவே ஒரு உறுதிப்பத்திரத்தில் (Pledge Document) கையொப்பமிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இதன் காரணமாக அடுத்து வந்த தேர்தல்களில் இம்மக்களைப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு பாராளுமன்றத்தில் ஒருவரும் இல்லாமல் போனார்கள். அதன்பிறகு 1948 ஆம் ஆண்டு இந்திய பாகிஸ்தான் பிரஜா உரிமைச் சட்டம் ஒன்று கொண்டு வந்த போதும் அதனை இலங்கை இந்திய காங்கிரஸ் எதிர்த்தது. எனினும் வசதி படைத்த சொற்ப தொகையினர் இறுதி நேரத்திற்கு இதற்கு விண்ணப்பித்து பிரஜா உரிமையைப் பெற்றனர். இதனைத்தொடர்ந்து இவ்விதம் பிரஜா உரிமை இல்லாமல் நாட்டில் வசிக்கும் இந்தியத் தமிழர்களை ( நாடற்றவர்கள் ) எவ்வாறு இந்தியாவுக்கு ( நாடு கடத்துவது ) அனுப்புவது என்பது தொடர்பில் அப்போதிலிருந்த இந்தியப் பிரதமர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
இத்தகைய பேச்சுவார்தைகளின் இறுதியில் இரு நாட்டுக்கிடையிலும் ஒப்பந்தங்கள் செய்து கொள்ளப்பட்டன. இக் கட்டத்தில் 134000 பேர் இலங்கை பிரஜா உரிமை பெற்றிருந்தனர். ஆதலால் மீதமிருந்த 975 000 பேரை இந்தியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று இலங்கை வலியுறுத்தியது. இலங்கை பிரதமர்களாக இருந்த டி.எஸ்.சேனாநாயக்கா அதன் பின்னர் ஜோன் கொத்தலாவல ஆகியோர் இந்தியப் பிரதமர் ஜவஹர்லால் நேருவுடன் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். இதன் அடிப்படையில் 1954 ஆம் ஆண்டு நேரு - கொத்தலாவல ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஆனால் நாடற்றவர்கள் என்ற ஒரு பிரிவினராக பிரஜாவுரிமையற்றவர்களை வரையறை செய்திருந்தனரே தவிர நேரு 1964 இல் இறக்கும் வரை அவர்களை இந்தியர்களாக அவர் ஏற்றுக்கொள்ளவில்லை.
நேருவின் இறப்பைத் தொடர்ந்து லால்பகதூர் சாஸ்திரி இந்தியப் பிரதமரானார். இலங்கையில் ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி வெற்றி பெற்று ஸ்ரீ மாவோ பண்டாரநாயக்க பிரதமரானார். இவர்கள் இருவர்களுக்கிடையிலும் நடந்த பல சுற்று பேச்சுவார்த்தைகளையடுத்து 1964 ஒக்டோபர் மாதம் ஸ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது. அதன் பிரகாரம் மொத்த நாடற்றவர்கள் சனத்தொகையான 975 000 பேரை இரண்டு நாடுகளும் பகிர்ந்து கொள்ள தீர்மானித்தன. இந்தியா 525000 பேரையும் அவர்களின் இயற்கை அதிகரிப்புடன் ஏற்றுக்கொள்ள இணங்கியது. அதுபோல் எஞ்சியவர்களின் 300 000 பேரை அவர்களின் இயற்கை அதிகரிப்புடன் இலங்கை ஏற்றுக்கொள்ள தீர்மானித்தது. இதற்கிடையில் மேலும் 180 000 பேர் எஞ்சியிருந்தனர். அவர்களின் விதியை தீர்மானிக்க வேறொரு தினம் குறிக்கப்பட்டது.
எனினும் 1977 வரையில் இந்த ஒப்பந்தம் அமுல் செய்யப்படாமலேயே இருந்தது. பின் இதனை எவ்வாறு அமுல் செய்வது தொடர்பில் இந்திரா காந்தி - ஸ்ரீமாவோ பண்டாரநாயக்காவுக்கு இடையில் மற்றுமொரு ஒப்பந்தம் செய்யப்பட்டது. அதன் பிரகாரம் இதை அமுல் செய்ய 15 வருட கால அவகாசம் வழங்கப்பட்டது. அதன் பின்னரே தாயகம் திரும்பல் என்ற போர்வையில் இவர்களை பலாத்காரமாக திருப்பியனுப்பும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. இந்த நீண்ட பேச்சுவார்த்தைகளின் போது ''உங்களுக்கு தாயகம் திரும்ப விருப்பமா'' என்று இந்த மக்களிடம் ஒரு தடவையாவது கேட்கப்படவில்லை. இம்மக்களின் தலைவர்களிடமாவது ஒரு அபிப்பிராயம் கேட்கப்படவில்லை. இந்த மக்களை ஒரு பண்டப் பொருளாகவே பரிமாற்றம் செய்ய அவர்கள் தீர்மானித்தனர்.
இந்த நடவடிக்கையின் போது இந்தியா செல்ல விரும்பாமல் இலங்கையில் பிரஜா உரிமைக்கு விண்ணப்பித்தவர்களே அதிக மிருந்தனர். அவர்களின் கோரிக்கைகளை நிராகரித்து அத்தகையவர்களை பலாத்காரமாக மூட்டை முடிச்சுகளுடன் ''ஒப்பாரிக்கோச்சிகளில்'' ஏற்றி கதறக் கதற இந்தியாவுக்கு துரத்தியடித்தனர். இவ்வாறு ஒரு அவல நாடகம் நடந்தேறியதற்கப்புறமும் இந்தியாவுக்கு செல்ல முடியாமலும் இலங்கைப் பிரஜா உரிமை கிடைக்காமலும் நாடற்றவர்களாக இருந்தவர்கள் எப்போது நம்மை பிடித்து அனுப்பி விடுவார்களோ என்ற பதை பதைப்பில் 1985 ஆம் ஆண்டு அப்போதைய ஜனாதிபதி ஆர். பிரேமதாசவால் நாடற்றவர்களுக்கான பிரஜா உரிமைக்கு ஏற்பாடு செய்யும் வரை தவித்துக்கொண்டிருந்தனர். இன்னுங்கூட இந்திய கடவுச் சீட்டுக்கள் பெற்று இந்தியாவுக்கு செல்ல முடியாமல் போனோரின் நிலை கேள்விக்குறியாகவே இருந்து வருகின்றது. இதன் பின்னரான அவலங்கள் இந்தியாவுக்கு போனவர்கள் மத்தியிலும் இலங்கையில் தங்கி விட்டவர்கள் மத்தியிலும் இன்று வரை நீடித்துக்கொண்டுதான் இருக்கிறது.