கண்டிச்சீமையிலே – இரா.சடகோபன் ( விமர்சனம் ) – இமையம்.
இரா.சடகோபன் எழுதியிருக்கிற ‘கண்டிச்சீமையிலே’ என்பது வரலாற்று நூல். கோப்பிக்கால வரலாறு 1823 -1893 என்று நூலின் தலைப்பிலேயே கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நூலின் வழியாக இலங்கையில் எழுபதாண்டுகளில் நிகழ்ந்த அரசியல் மாற்றங்கள், பொருளாதார, வாழ்வியல் மாற்றங்கள் அனைத்தையும் அறிந்துகொள்ள முடியும். நடந்து முடிந்த வரலாற்று நிகழ்வுகளை வெறும் புள்ளிவிபர தொகுப்புகளாக தொகுத்து தராமல், சமூக நிகழ்வுகளுக்கு பின்னே இருந்த அரசியல், பொருளாதார வாழ்வியற் காரணங்களையும் சேர்த்து எழுதியிருப்பது, ஆராய்ந்து எழுதியிருப்பதுதான் இந்நூலின் பலம்.
இலங்கையில் வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்பு, குறிப்பாக பிரிட்டிஷ் ராணுவத்தினரின் ஆக்கிரமிப்பு பற்றி நூலில் சொல்லப்படுகிறது. 1815-ல் இலங்கை முழுவதுமே பிரிட்டிஷ் ராணுவ கட்டுபாட்டின்கீழ் வந்தபோது ஏற்பட்ட சமூக மாற்றங்கள் என்ன? சிங்ஹபிட்டி என்ற இடத்தில் சோதனை முயற்சியாக நூற்றிஐம்பது ஏக்கரில் பயிரிடப்பட்ட கோப்பி சில ஆண்டுகளிலேயே பெரும் வளர்ச்சி பெற்று ஒரு லட்சம் ஏக்கருக்குமேல் பயிரிடப்பட்டது. எப்படி, எதனால்? கோப்பியின் மூலம் கிடைத்த வருமானம்தான் மொத்த இலங்கையின் பொருளாதாரத்தையே நிர்ணயிக்கிற சக்தியாக இருக்கிறது. கோப்பியின் உற்பத்தியைப் பெருக்குவதற்காகவும், அதிக அளவிலான ஏற்றுமதியை செய்வதற்காகவும் தமிழகத்திலிருந்து கூலிகளை வரவழைக்கப்படுகின்றனர். ஐம்பது வருட காலத்தில் முப்பது லட்சம் தமிழக கூலிகள் வந்துபோயிருக்கின்றனர். இந்த கூலிகள்தான் தங்களுடைய உழைப்பால் கையடக்கமே உள்ள ‘சிலோன்’ என்ற தீவினை உலகு அறியச் செய்தவர்கள். கூலிகளை கங்காணிகள், தோட்டத்துரைமார்கள் நடத்தியவிதம், கூலிகள் பட்ட துயரம் என்ன என்பதெல்லாம் நூலில் விரிவாக எழுதப்பட்டுள்ளது. தோட்ட துரைமார்கள் நடத்திய கொடுமைகளைவிட கங்காணிகள் இரண்டு மடங்கு செய்துள்ளனர். கோப்பி தோட்ட தொழிலுக்கும், தேயிலை தோட்ட தொழிலுக்கும் சிங்களவர்கள் – தொழிலாளர்களாக வர மறுத்துவிட்டார்கள் என்பது முக்கியமானது. கோப்பி தோட்டத் தொழிலையும், தேயிலை தோட்ட தொழிலையும் அவர்கள் இழிவாகக் கருதினார்கள்.
தமிழகத்திலிருந்து வந்த கூலிகள் தலைமன்னாரிலிருந்து கம்பளைவரை நூற்றிஐம்பது மைல் தூரத்தை நடந்தே சென்றுள்ளனர். நடைபயணத்தின்போது கூலிகள் பலர் நோயினால் இறந்துள்ளனர். தமிழகத்திலிருந்து இலங்கைக்கு செல்லும் வழியில் பலமுறை படகு கவிழ்ந்து பலர் இறந்துள்ளனர். 1853-ல் கொழும்பு என்ற கப்பல் கவிழ்ந்து நூற்றுக்கும் அதிகமான கூலிகள் இறந்துள்ளனர். இவையெல்லாம் வெறும் தகவல்கள் அல்ல. ஒரு பக்கம் கோப்பியின் வளர்ச்சி, இலங்கையின் பொருளாதார வளர்ச்சி தோட்டதுரைமார்களின் வளர்ச்சியைப் பற்றி விவரிக்கிற அதே நேரத்தில் மறுபக்கம் தோட்ட தொழிலாளர்களின் அவல வாழ்வினையும் தக்க சான்றுகளுடன் இரா.சடகோபன் எழுதியிருக்கிறார். இலங்கையில் கோப்பி பயிரிடப்பட்ட பிறகுதான் பொருள் கொடுத்து பொருள் வாங்கும் நிலைமாறி, பணம் கொடுத்து பொருள் வாங்கும் செயல்முறை நடைமுறைக்கு வருகிறது.
ஹெமிலியா வெங்டாரிக்ஸ் என்ற நோய் பரவியதால் பெரும் வர்த்தகத்தை ஈட்டிதந்த கோப்பி படிப்படியாக அழிய ஆரம்பிக்கிறது. பெரும் செல்வந்தர்களாக இருந்த தோட்ட துரைமார்களின் வாழ்க்கைத்தரம் சீரழிந்துபோகிறது. இலங்கையின் வர்த்தகமும் வீழ்ச்சியடைகிறது. கோப்பி தொழில் முற்றிலுமாக வீழ்ச்சியடைந்துவிட்டதால் வேறுவழியின்றியும், படிப்படியாகவும் கோப்பி தொழிலாளர்கள் தேயிலை தோட்ட தொழிலாளர்களாக மாறவேண்டிய நிலை. மாறினார்கள். கோப்பி தொழில் அழிந்து, தோட்ட துரைமார்கள் வெளியேறியபிறகு, தேயிலை தோட்டமாக மாறிய பிறகு இலங்கையில், கண்டியில் பொருளாதார ரீதியாக, அரசியல் ரீதியாக, வாழ்வியல் முறை ரீதியாக ஏற்பட்ட மாற்றங்களைப்பற்றி இரா.சடகோபன் தெளிவாக எழுதியிருக்கிறார். அதோடு 1914-ல் இலங்கையில் பரவிய பிளேக் நோயினால் ஏற்பட்ட விளைவுகள் பற்றிய குறிப்பும் நூலுக்குள் இருக்கிறது. 1940-ல் இலங்கை இந்திய காங்கிரஸ் – என்ற அமைப்பு உருவாவது, 1949-ல் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் என்ற அமைப்பு உருவாவது, அதனுடைய செயல்பாடுகள், 1968-ல் வம்சாவழி பிரஜை உரிமைகோரி நடத்திய போராட்டங்கள், தொழிலாளர் நலச்சட்டங்கள் அதனுடைய சாத பாதகமான அம்சங்கள் பற்றியெல்லாம் நூலாசிரியர் துல்லியமாக பதிவு செய்திருக்கிறார்.
‘கண்டிச்சீமையிலே’ நூலில் இரா.சடகோபன் எதையுமே கற்பனையாகவோ, யூகமாகவோ எழுதவில்லை. தன்னுடைய மனச்சாய்வுக்கு ஏற்ற வகையில் வரலாற்றை திரித்து, புனைந்து, இட்டுக்கட்டி எழுதவில்லை. ஒவ்வொரு நிகழ்வையும் வரலாற்றையும் ‘சான்றுகளுடன்தான் எழுதியிருக்கிறார். தேவையான புள்ளிவிபரங்கள், தகவல் என்று கொடுத்திருக்கிறார். தன்னுடைய எழுத்து, கருத்து உண்மை என்பதை நிரூபிக்கும் விதமாக நிழற்பட ஆதாரங்களையும் தந்திருக்கிறார். எழுபதாண்டுகால கண்டியை மட்டுமல்ல மொத்த இலங்கையையுமே புரிந்துகொள்வதற்கு இந்த நூல் பெரிதும் துணை செய்கிறது. முக்கியமான ஆவனமாக இருக்கிறது.
•
Express newspapers private limited
No- 185, grand pass road
Colombo -14
Srilanga .
No- 185, grand pass road
Colombo -14
Srilanga .