(30.09.1990ஆம் திகதி வீரகேசரி வாரமலரில் பிரசுரமானது)
(சிறுகதை)
இரா. சடகோபன்
""நாளைக்கு எப்படியாவது இந்தப் பிரச்சினைக்குத் தீர்வு கண்டாக வேண்டும். நான் சொன்னால் மற்றவர்கள் கேட்பார்கள். எடுத்த எடுப்பில் வேலையை நிறுத்திப்புட்டார் என்ன செய்வது.... அதையுந்தான் பார்க்கலாம்''
சீனிவாசகத்தின் நெஞ்சில் ஓடிய உரத்த எண்ணங்கள் போலவே அவனுடைய மண் வெட்டியும் பலமாக நிலத்தைக் கொத்திக் கொண்டிருந்தது.
எண்ணத்தில் எழுந்த சீற்றம் அவனறியாமலேயே அவன் செய்து கொண்டிருந்த செயலிலும் வெளிப்பட்டதால் மண்வெட்டி மிக வேகமாக மண்ணில் புதைந்திருந்த கருங்கல் ஒன்றில் தாக்கி பளீர் என்று தீப்பொறி எழுந்ததைக்கூட அவன் உணரவில்லை. சக்திக்கு மீறிய உழைப்பின் கடுமையால் வியர்வை பெருக்கெடுத்திருந்தது. தலையில் இருந்து நெற்றியின் ஊடாக கீழ்நோக்கி வழிந்த வியர்வைக் கோடொன்று மூக்கின் நுணிவரை வந்து அதற்கப்பால் செல்ல மார்க்கம் தெரியாமல் நிலத்தில் சிந்திக் கொண்டிருந்தது. அதனைத் துடைத்தெறிவதில் அவன் அக்கறை கொண்டதாகத் தெரியவில்லை.
எழுபதுகளில் அரசாங்கம் கொண்டு வந்திருந்த காணிச் சீர்திருத்தம் மற்றும் காணி உச்சவரம்பு சட்டங்கள் காரணமாக பல தனியாரின் தேயிலைத் தோட்டங்கள் அரசாங்கத்துக்குச் சொந்தமாகின.
அதேசமயம் தோட்டச் சொந்தக்காரர் ஒருவர் 50 ஏக்கர் விஸ்தீரணம் உள்ள தோட்டமொன்றை சொந்தமாக வைத்துக் கொள்ள மாத்திரம் சட்டம் இடமளித்தது. இதனைப் பயன்படுத்தி தோட்டச் சொந்தக்காரர்கள் பலர் தமது குடும்ப அங்கத்தினர்களின் பெயர்களில் தலா 50 ஏக்கர்கள் என எழுதி 200 ஏக்கர், 300 ஏக்கர் தேயிலைத் தோட்டங்களை சொந்தமாக வைத்திருந்தனர்.
இவை தவிர காணி பகிர்ந்தளித்தல், பல பயிராக்கல் திட்டம் போன்றன காரணமாகவும் தோட்டங்கள் துண்டாடப்பட்டு ஆங்காங்கே உதிரி உதிரியான தோட்டங்கள் உருவாகின.
இந்தத் தோட்டங்களில் தொழில் புரிந்து வந்த பல்லாயிரக்கணக்கான தோட்டத் தொழிலாளரும் வேறு தோட்டங்களுக்கு குடி பெயர்ந்தனர். சிலர் தொடர்ந்தும் தோட்டங்களில் வேலை செய்ய விரும்பாமல் வவுனியா போன்ற பிரதேசங்களுக்குச் சென்று குடியேறினர். சிலர் வேறு தோட்டங்கள் கிடைக்காததால் அந்தந்த தோட்டங்களிலேயே கிடைத்த வேலைகளைச் செய்து கொண்டு தங்கிவிட்டனர். சீனிவாசகம் போன்றவர்கள் இவ்விதம் தங்கிவிட்டவர்களே.
தோட்டங்கள் தேசிய மயமாக்கப்பட்டதால் பாதிக்கப்பட்டவர்கள் இவர்களே.
சம்பள உயர்வுகளோ, சுகாதார வசதிகளோ, வீடமைப்புத் திட்டங்களோ இவர்களை அணுகியதாகத் தெரியவில்லை. இந்தச் சமாச்சாரங்கள் தோட்டத் தொழிலாளருக்கு எந்த அளவு கிடைத்திருக்கின்றன என்பது வேறு சமாச்சாரம்.
சீனிவாசகத்துக்கு அன்று கான் வெட்டும் வேலை. தேயிலை மலைகளில் மழைக் காலத்தில் ஓடிவரும் தண்ணீரை தேக்குவதற்கும் தேயிலை மரங்களின் வேர் பகுதிகளில் மண்ணரிப்பைத் தடை செய்வதற்கும் இடைக்கிடை கான் வெட்டப்படுகின்றது.
கான் வெட்டுதல், முள்ளு குத்துதல், உரம் போடுதல், புல் வெட்டுதல் முதலிய பராமரிப்பு வேலைகளை ஆண் தொழிலாளர்களும், கொழுந்து பறித்தல் வேலையை பெண் தொழிலாளர்களும் செய்து வந்தனர். சில சமயங்களில் வேறு வேலைகள் இல்லாதபோது ஆண் தொழிலாளர்களும் கொழுந்து பறிக்க வேண்டும்.
சீனிவாசகத்துக்கு கான் வெட்டுவதைவிட கொழுந்தெடுக்கவே அதிகம் விருப்பம். இதற்கு விசேடமான காரணம் ஒன்றிருந்தது.
சீனிவாசகத்தின் குடும்பத்தினரையும் சேர்த்து சுமார் முப்பது குடும்பங்கள் அந்த சிறிய தோட்டத்தில் வேலை செய்து வந்தனர். அதில் செல்லம்மாவின் குடும்பமும் ஒன்று.
செல்லம்மா, தோட்டங்கள் துண்டாடப்பட்டபோது எங்கெங்கோ தேடியலைந்து விட்டு வேலை கிடைக்காமல் கடைசியாக இந்தத் தோட்டத்துக்கு வந்து சேர்ந்தாள். அவளுடன் அவளது இளைய மகள் ராசாத்தியும் மூத்த மகள் காமாட்சியும், எங்கோ பிறந்து எங்கோ வளர்ந்து பின்னர் இவர்களுடன் ஒட்டிக் கொண்டு விட்ட சுப்பு ஆகியவர்களும் வந்தனர். சுப்புவின் பெண்சாதியை யாரோ இழுத்துக் கொண்டு ஓடி விட்டதால் அவனது புத்தி கொஞ்சம் பேதலித்திருந்தது. அவனுக்கு சூனியம் வைத்துவிட்டு அவன் பெண்சாதி ஓடிவிட்டாள் என்ற கதையும் அவனைப் பற்றியுண்டு.
சீனிவாசகத்துக்கு செல்லம்மாவின் இளைய மகள் ராசாத்தி மேல் எப்பவும் ஒரு அனுதாபமிருந்தது. அவளும் இவனைப் பார்க்கும் போதெல்லாம் அந்தச் சின்னக் கரிய விழிகளை உருட்டி ஏதோ சேதி சொன்னது போல்! இவனும் புரிந்து கொண்டான். அவர்கள் இதுவரை நேரிடையாகப் பேசிக் கொண்டது கிடையாது.
சீனி என்று அந்தத் தோட்டத்தினர் அவனை ஏக வசனத்தில் அழைத்தாலும் அவன் மீது அவர்களுக்கு தனி மரியாதையுண்டு. அவனும் மற்றவர்களுடன் அடக்கத்துடனும் கௌரவமாகவும் நடந்து கொள்கிறவன்தான்.
ராசாத்தி மாத்திரம் இந்த மரியாதை உணர்வுகளையும் தாண்டி தனது இதயத்து மெல்லுணர்வுகளில் அவனுக்கு இடமளித்திருந்தாள். இந்த சிறுசுகளின் இனந்தெரியாத கூத்துக்கள் பற்றி செல்லம்மாள் சாடையாக புரிந்து வைத்திருந்தாலும் அதனை அவள் கண்டுகொண்டதாகக் காட்டிக் கொள்ளவில்லை.
ராசாத்தியை நாமெல்லாம் பார்த்துக் கொண்டிருக்கலாம் என்பதற்காகவே சீனி கொழுந்து மலைக்கு வேலைக்குப் போவதற்கு ஆசைப்படுவாள்.
தேயிலை மலையில் கொழுந்து பறிக்கும் போது அவர்கள் சும்மா வாயைப் பொத்திக் கொண்டு வேலை செய்வது கிடையாது. எதையெதையாவது பேசிக் கொண்டோ... பெரும்பாலும் வம்புப் பேச்சுக்களாக இருக்கும். அல்லது பாடிக் கொண்டு அநேகமாக சினிமாப் பாட்டுக்கள். முழுவதுமில்லாமல் முதலிரண்டு அடிகள் அல்லது ஒரு பத்தி எல்லோருக்கும் இப்படி கலகலப்பாக வேலை செய்வதால் மாச்சல் தெரியாது.
இடையிடையே ""மொட்டு புழுங்காதே... நாரு காம்பு கிள்ளாதே... வங்கி ஒடிக்காதே'' ரெட்டெல புருங்காதே என்று கொழுந்து பிடுங்கும் போது எதைத் தவிர்க்க வேண்டும் என்பதை கங்காணி கோவிந்தசாமியின் குரல் திரும்பத்திரும்ப அறிவுறுத்திக் கொண்டே இருக்கும்.
கங்காணியின் குரல் ஒரு அதிகாரக் கட்டளையாக வந்தபோதும் அவர்களுக்கு அது நன்கு பழகி இருந்ததால் அதனை யாரும் சட்டை செய்வது கிடையாது. சில போதுகளில் அவர் உலகம் கண்டறியாத விரசமான வார்த்தைகளால் தவறாகக் கொழுந்து பறித்துவிட்ட சில பெண்களைத் திட்டித் தீர்த்து விடுவார். ஆனால் சில கணங்களிலேயே சிறிதும் மனக் கிலேசம் இல்லாதவாறு அதே பெண்களிடம் மிகுந்த உரிமையுடன் ""ஒரு வாய்க்கு வெத்திலை இருந்தால் கொடு'' என்று வாங்கிப் போட்டுக் கொள்வார். அந்தப் பெண்களும் எந்தவிதமான வௌஸ்தையும் இல்லாமல் அவருக்கு வெற்றிலை மடித்துக் கொடுப்பார்கள்.
இந்தச் செயல் அவர் செய்துவிட்ட தவறுக்கு பிராயச்சித்தம் போலவும் அதனை இவர்கள் மன்னித்துவிட்டது போலவும் இருக்கும். இதனை இவர்கள் உணர்வுபூர்வமாக சிந்தித்து செய்வதில்லை என்றாலும் நீண்ட காலமாக அது அப்படித்தான் நடைபெற்று வருகின்றது.
எட்டு மணி நேரம் வேலை என்ற தொழிற் சட்டமெல்லாம் அவர்களைப் பாதிப்பதில்லை. அதிகாலை ஆறு மணிக்கு தோட்டக் காவல்காரன் தனது முறைகாவலின் இறுதிச் சுற்றில் முடிவினை அறிவிக்கும் முகமாக ஒரு இரும்புத் துண்டை வைத்து "டொங்... டொங்... டொங்...'' என்று ஓசை எழுப்புவான். இந்த ஓசை கேட்டு பதினைந்து நிமிடங்களுக்குள் தொழிலாளர்கள் அனைவரும் பிட்ரட்டுக் களத்துக்கு செல்ல வேண்டும்.
முந்தியெல்லாம் அந்தத் தோட்டம் ஆயிரத்து இருநூறு ஏக்கர் விஸ்தீரணமுள்ள பெரிய தோட்டமாக இருந்தது. தோட்டத்துக்கென சொந்தமாக கொழுந்தரைக்கும் தொழிற்சாலை ஒன்றுமிருந்தது.
காலையில் தொழில் தொடங்குவதற்கும் மாலையில் வேலை விடும் போதும் மத்தியானச் சாப்பாட்டு வேலைக்கும் ஆலைச்சங்கொலி எழுப்புவார்கள். மூன்று டிவிசன்களாக இருந்த அந்த தோட்டத்தில் மாத்திரம் சுமார் எழுநூறு தொழிலாளர்கள் வேலை செய்தார்கள்.
அப்போது சீனிக்கு பதினொரு வயதிருக்கும். தோட்டத்து பாடசாலையில் ஐந்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த காலமது. திடீரென தோட்டத்தை அளந்து பிரித்து கொடுக்கப் போகிறார்கள் என்றும் அதற்கு அரசாங்கத்தில் இருந்து அதிகாரிகள் வரப் போகிறார்கள் என்றும் செய்தி பரவியது.
அந்தப் பகுதியில் இருந்த தோட்டங்களில் தொழிலாளர்கள் எல்லோரும் கவலையும் அதே சமயம் கோபமும் கொண்டார்கள். தோட்டத் தொழிலாளர்களுக்கும் தொழிற்சங்கங்களுக்குமிடையில் ஏதேதோ பேச்சுவார்த்தைகள் நடந்தன. பேச்சுவார்த்தைகளில் அரசாங்க அதிகாரிகளும் கலந்து கொண்டதாகப் பேசிக் கொண்டார்கள். ஆனால் தோட்டங்களைப் பிரித்துக் கொடுப்பது என்ற அரசாங்கத்தின் தீர்மானத்தில் எந்தவித மாற்றமும் ஏற்படவில்லை.
தோட்டத் தொழிலாளரும் தோட்டங்களை பிரிக்க அனுமதிப்பதில்லை என்பதில் பிடிவாதமாக இருந்தார்கள். அந்த விடயத்தில் அவர்களின் ஒற்றுமை வியக்கத்தக்கதாக இருந்தது.
தேயிலைத் தோட்டக் காணிகளை அளந்து பிரிப்பதற்கென நியமித்திருந்த அந்த துயரமான குறுதிதோய்ந்த சிவப்பு நாளும் வந்தது.
தோட்டத் தொழிலாளரின் தீவிரமான எதிர்ப்பையும் அவர்கள் ஒற்றுமையையும் நன்கு தெரிந்து கொண்டிருந்த அரசாங்கம் நிலத்தை பிரிக்கவென வந்திருந்த அதிகாரிகளுடன் போலீஸையும் இராணுவத்தையும் துப்பாக்கிகள் சகிதம் அனுப்பி வைத்திருந்தது.
இவற்றையெல்லாம் கண்டு தோட்டத் தொழிலாளர்கள் கோபமடைந்தார்கள்.
சீற்றம் கொண்டார்கள்.
வெகுண்டெழுந்தார்கள்... விளைவு பாதையில் சென்ற வாகனங்கள் தீக்கிரையாக்கப்பட்டன. பாலங்கள் தகர்க்கப்பட்டன. அதிகாரிகள் தாக்கப்பட்டனர். அவர்கள் வந்த வாகனங்கள் உடைக்கப்பட்டன.
இவற்றுக்கு மாறாக எதிர் தரப்பினர் கண்ணீர்ப் புகைக்குண்டுகளைப் பொழிந்தனர். துப்பாக்கிகள் சீறிக் கொண்டு குண்டுகளைக் கக்கின. பலர் காயமடைந்தனர். ஒரு அப்பாவித் தொழிலாளியின் உயிர் பறிக்கப்பட்டது.
இறந்த தொழிலாளியின் மரணச் சடங்குகள் பிரமாண்டமாக ஒழுங் செய்யப்பட்டன. பல்லாயிரக்கணக்கான தொழிலாளர்கள் ஒன்றுகூடி தமது சக தொழிலாளிக்கு அஞ்சலி செலுத்தினர். அரசியல்வாதிக்கும் தொழிற்சங்க பிரதிநிதிக்கும் தலைவர்களுக்கும் மேடை போட்டு ஒலிபெருக்கி வைத்து அனுதாப உரை நிகழ்த்துவதாகக் கூறி அரசியல் பேசி மாலை போட்டுக் கொண்டனர்.
அத்துடன் அன்றைய சோக சம்பவம் முடிவுற்றாலும் காணி பகிர்ந்தளிப்பதற்காக தோட்டங்கள் துண்டாடப்படுவது முடிவுறவில்லை. அது தொடரத்தான் செய்தது. தோட்டத் தொழிலாளர்கள் எவ்வளவுதான் ஒற்றுமையாக இருந்த போதும் அந்த ஒற்றுமையின் சக்தியைப் பயன்படுத்தி தமது கோரிக்கையை வென்றெடுக்க தொழிற்சங்கங்கள் தவறிவிட்டன. தோட்டத் தொழிலாளர்கள் தம் விதியை நொந்து ஒரு நெடிய பெருமூச்சு விட்டுக் கொண்டு தொடர்ந்தும் தோட்டங்களில் தம் வியர்வையைச் சிந்தத் தொடங்கினர்.
அதற்கப்புறம் மிகச் சொற்ப காலம் தான் சீனியின் ஐந்தாம் வகுப்பு பள்ளி வாழ்க்கை தொடர்ந்தது. தோட்டங்கள் பிரிக்கப்பட்ட போது பல தோட்டப் பாடசாலைகளும் மூடப்பட்டுவிட்டன. அவற்றுள் சீனியின் பாடசாலையும் ஒன்று.
அந்தப் பாடசாலையின் எல்லா மாணவர்களும் எங்கெங்கோ அவர்கள் தாய் தந்தையர் சென்ற வழி பிரிந்து சென்றுவிட்டனர். அவர்கள் எல்லோரும் அதன் பின்னர் படிப்பைத் தொடர்ந்தார்களா என்பது சீனிக்குத் தெரியாது. ஆனால் ஒன்று நிச்சயமாயிற்று. சீனி அதன் பின்னர் படிக்கவில்லை.
கொஞ்சநாள் கொழுந்து மலையில் வேலை செய்து வந்த தமது தாய் தந்தையருக்கு "தேத்தண்ணி' (சர்க்கரை போடாத "பிளேன்டி' அதனை அவர்கள் மத்தியான சாப்பாட்டு வேளைக்கு முன்பு சுமார் 11 மணியளவில் வெறும் தேங்காய் ரொட்டித் துண்டுடொன்றை கடித்துக் கொண்டு குடிப்பது வழக்கம்) கொண்டுபோய் கொடுக்கும் பணியைச் செய்து வந்தான். அல்லது தந்தையுடன் சேர்ந்து "கொந்தரப்பு' புல் வெட்டுவான்.
இந்தக் காலத்தில் அவனது தந்தையும் மற்றவர்களைப் போல் "பத்துச் சீட்டை (தோட்ட வதிவிட அத்தாட்சிப் பத்திரம்) தூக்கிக் கொண்டு பல தோட்டங்களில் இடம் தேடி அலைந்தார். அவருக்கு தோதான ஒரு இடமும் கிடைத்தபாடில்லை.
ஒருநாள் அவரும் "கவ்வாத்து' (தேயிலை இலைகள் முதிர்ச்சியடையும் போது மட்டம் வெட்டுதல்) மலையில் வேலை செய்யும் போது உச்சி வெய்யிலில் மயங்கி சுருண்டு விழுந்து செத்துப் போனார். அதன் பிறகு சீனியன் தாய் வேறு தோட்டம் தேடும் முயற்சியில் ஈடுபடவில்லை. சிறிது காலத்தில் சீனியும் எஞ்சியிருந்த சிலருடன் முழுநேரத் தோட்டத் தொழிலாளியாகி விட்டான்.
சீனியின் வாழ்வில் தோட்டங்கள் பிரிக்கப்படுவதற்கு முந்திய அவன் ஐந்தாம் வகுப்பு வரை படித்த காலம்தான் பொற்காலம். அந்த நினைவுகளை சுமப்பதில் மாத்திரம்தான் அவன் சந்தோஷப்பட்டான்.
சீரும் சிறப்புமாக தோட்டத்துக்கு ஒதுக்குப்புறமாக ஒரு காலத்தில் தோட்டத்தின் நடு நாயகமாக விளங்கிய இப்போது பூசை புனஸ்காரங்கள் எதுவுமின்றி பாழடைந்து போயிருக்கும் அந்த மாரியம்மன் கோயிலை மறக்கவே முடியாது. வருடத்தில் எத்தனை கொண்டாட்டங்கள், திருவிழாக்கள், பொங்கல், சித்திரை வருடப் பிறப்பு, தீபாவளி, தைப்பூசம், வருடாந்த அம்மன் கரகம்பாலித்தல், சப்பரம், சாமி தூக்குதல், பஜனை, கோவிந்தநாம சங்கீர்த்தனம், காமன்கூத்து, ஆடிபதினெட்டு, கார்த்திகைத் தீபம், கவ்வாத்து மலை தேயிலை மிளாரெல்லாம் மூன்றாம் உயரத்துக்கு வைத்துக்கட்டி சொக்கப்பனை கொழுத்துதல், சூரசம்ஹாரம் இன்னும் எத்தனை, தப்படித்தல், இதற்கு ஏறுக்கு மாறாக ஆடிய சிறு பிள்ளைத்தனமான சதுராட்டங்கள் எல்லாம் அந்த அம்மன் கோயிலைச் சுற்றி எத்தனை கதைகள், எத்தனை நினைவுகள்.
இப்பவும் சிலநேரம் அந்த கோயில் பக்கம் வேலைமனக்கெட்டு சீனி போய் வருவான். கதவு இற்றுபோய் உடைந்து கிதிலமடைந்திருந்தது. சுவர்கள் காரை பெயர்த்து ஆங்காங்கே வீறுவிட்டிருந்தன. கூரையின் தகரங்கள் கறல்பிடித்து ஓட்டை விழுந்திருந்ததால் அதனூடாக வந்த சூரியக் கீற்றுகள் நிலத்தில் ஆயிரம் நிலாக்களை இறைத்துவிட்டது போல் தோற்றம் தந்தன. சுவற்று மூலைகளில் நூலால் படைகள், சிலந்தி வலைகள் அடர்த்தியாகப் படர்ந்திருந்தன.
அம்மன் சிலைக்கென்று தனியான கர்ப்பக் கிரகம் கிடையாது. உள்ளிருந்த ஒரு மேடையில் கற்றுக் குட்டித்தனமாக செதுக்கப்பட்டதொரு அம்மன் சிலை. அதனைச் சுற்றி எப்போதோ சாத்தப்பட்ட அம்மனுக்கு விருப்பமான சிவப்புப் பட்டுத்துணி சாயம் வெளுத்து இற்று பாதி கிழித்திருந்தது. இவற்றையெல்லாம் மீறி நாலாபுறமும் வளர்ந்துவிட்ட கரையான் புற்றுக்கள். சிலவற்றில் பாம்புகள் வாழ்ந்திருந்ததன் அடையாளம்.
இவையெல்லாம் கோயிலின் ஜீவனற்ற தன்மையினை பூதாகரமானதாகப் பறைசாற்றிக் கொண்டிருக்கும். சீனி மெல்ல கோயிலுக்குள் எட்டிப் பார்க்கும் போது சற்றே மனதில் பய உணர்வு தோன்றினாலும் 15 வருடங்களுக்கு முன்பு வாழ்ந்திருந்த ஜீவிதத்தின் உன்னதங்கள் உடனேயே அவன் மனதை ஆக்கிரமித்துக் கொள்ளும். சில நிமிடங்கள் அந்த பசுமை நினைவுகளில் அவன் லயித்துப் போய் மீளும் போது கண் அவனையறியாமல் அவன் கண்களில் நீர் வழிந்தோடியிருக்கும். அது சோகத்தினாலா... சந்தோஷத்தினாலா என்பது அவனுக்குத் தெரியாது. ஆனால் அதனை அவன் துøடத்து விட்டுக் கொள்வது கிடையாது.
சீனி ஒரு தீர்மானத்துக்கு வந்திருந்தான். இன்று வேலைவிட்டதும் எல்லாரும் கூறி ஒரு முடிவுக்கு வந்து விடுவதென்றும் காலையில் பிரட்டுக்கலைக்கு முதலாளி வரும் போது பிரச்சினையை கிளப்புவதென்றும் அவன் மனதுக்குள் திட்டம் உருவானது.
அவர்கள் தங்களுக்குள் ஏதும் பிரச்சினைகள் பற்றி பேசுவதென்றால் பிரட்டுக்களத்தை ஒட்டியிருக்கும் பிள்ளை மடுவத்தில்தான் கூடுவார்கள். பொதுவாக முதலாளிக்கும் தொழிலாளர்களுக்கும் இடையில் ஏதும் பேச்சுவார்த்தைகள் நடத்துவதென்றாலும் அது சீனி மூலம்தான் நடக்குமாதலால் அவன்தான் அவர்களின் தலைவன் போல் தொழிற்பட்டு வந்தõன். அதனால் அவன் சொல்லுக்கு எல்லோரும் கட்டுப்பட்டவர்களாகவே இருந்தனர்.
தோட்டத்தில் நிர்வாகம் என்று பெரிதாக ஒன்றும் கிடையாது. தோட்டத்தின் செயல்பாடுகள் அனைத்துக்கும் முதலாளியே பொறுப்பாக இருந்தார். அவருக்கு உதவியாக ஒரு மனேஜர் இருந்தார். முதலாளியின் பங்களாவின் ஒரு பகுதியே அலுவலகமாகவும் இருந்து வந்தது.
அரசாங்கத்தால் கொடுக்கப்பட்ட சிறிதளவு சம்பள உயர்வுகளும் அவர்களை எட்டவில்லை. மாதத்தில் 15 நாட்களுக்குள் குறைவாகவே அவர்களுக்கு வேலைகள் வழங்கப்பட்டன. ஊழியர் சேமலாப நிதிக்குக்கூட அவர்களை பதிவு செய்து கொண்டிருக்கவில்லை. அநேகமாக எல்லா தொழிலாளி குடும்பங்களுமே முதலாளிக்கு கடனாளிகளாக இருந்தன. அதனால் ஒரு கொத்தடிமை முறை அமைப்பே அங்கு காணப்பட்டது.
சீனி எல்லோருக்கும் சொல்லியனுப்பியிருந்தபடியே மாலை ஐந்தரை மணிக்கு எல்லாரும் பிள்ளை மடுவத்தில் கூடியிருந்தனர். இருட்டுப்பட்டு விட்டால் பேசுவதற்கு வசதியாக ஒரு பெற்றோல் மாக்ஸ் லாம்பும் எடுத்து வரப்பட்டிருந்தது.
எல்லாரிடமும் அபிப்பிராயம் கேட்டதன் பின்னர் சீனி முடிவாகச் சொன்னான். ""என்னா சொல்றேன்னா கவன்மென்ற் தோட்டங்கள்ல எல்லாம் கூலி ஒசத்தி இருக்கு. மாதம் இருவத்தியாருநாள் வேலை கொடுக்கறாங்க. இதுல முதலாளிக்கி நஸ்டம் ஒன்றும் கெடையாது. நாம ஒழைக்கிறதுக்குத்தான் கூலி கேக்குறோம். நாயமா கேட்டுப் பாப்போம். ஆவலையானா வேற மாதிரி வேலையைக் கூட்ட வேண்டியிறுதான்'' எல்லோரும் தலையாட்டினார்கள். கங்காணி கோவிந்தசாமி மாத்திரம் எல்லாத்தையும் கேட்டுக் கொண்டு பேசாமல் இருந்தார். நீண்ட நாட்களாகவே அவர் முதலாளிக்கு இரண்டாம் படை வேலை செய்வது சனிக்கும் மற்றவர்களுக்கும் தெரியும். அன்றும் அவர் எழுந்து சென்றபோது அவர்கள் பேசிக் கொண்ட விடயம் முதலாளிக்கு அன்றிரவே தெரிந்துவிடும் என்பதும் அவர்கள் புரிந்து கொண்ட விடயம்தான்.
திட்டமிட்டிருந்தபடியே அதிகாலையில் பிரட்டுக் கலைக்கும் போதே ஆரம்பித்துவிட்டான் சீனி.
""ஐயா... எங்கள் தினக்கூலியை கவுறாமெண்டு கனத்துக்கு ஒசத்திக் கொடுக்க...''
இடைமறித்தார் முதலாளி.
""அதெல்லாம் சரிப்படாது. நீயெல்லாம் நேத்து பேசின விசயம் நாங் கேள்விப்பட்டது. நீ இல்லாட்டி நாங் வேற ஆள் போட்டு வேலை செய்யறது''
""வேற ஆளுங்க இங்கே நுழைந்தால் நடக்கிறதே வேள'' அதே சூட்டோடு சீனியும் பதிலளித்தான்.
""மெனேஜர்... இவங்க ஒழுங்கா வேலை செய்யறதுன்னு சொன்னா வேல கொடுக்கிறது. இல்லாட்டி வேலை நிப்பாட்டறது. நாங் போறது'' முதலாளி கொதிப்புடன் சொல்லிவிட்டு மோட்டார் சைக்கிளை மிகுந்த சத்தத்துடன் கிளப்பிக் கொண்டு போய் விட்டார். சூரியன் உச்சிக்கு வந்துவிட்டான். மனேஜரும் கொஞ்சநேரம் பொறுத்துப் பார்த்துவிட்டு போய்விட்டார்.
இவ்வளவையும் தான் ஒருவனே சிந்தித்து திட்டமிட்டு செய்துவிட்ட சீனி மேற்கொண்டு என்ன செய்யலாம் என்று கவலைப்பட்டான். ஆனால் இது வரை தான் செய்துவிட்ட விடயத்தில் ஒரு மிகப் பெரிய நோக்கமும் நியாயமும் உரிமையும் இருக்கின்றது என்பதில் அவனுக்கு அசைக்க முடியாத நம்பிக்கை இருந்தது.
தோட்டத்தில் வேலை நடந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டன. காலையில் மனேஜர் மட்டுமே பிரட்டுக் களத்துக்கு வந்து சுமார் ஒரு மணி நேரம் காத்திருந்து விட்டுப் போனார்.
இந்த ஐந்து நாட்களில் தோட்டத்தின் சுமூக உறவு பாதித்திருந்தது. கங்காணி கோவிந்தசாமி மாத்திரமே எல்லா வீடுகளுக்கும் போய் ஏதோ உபதேசம் பண்ணி வருவதாகக் கேள்விப்பட்டான் சீனி.
அதுவரை அவனிடம் அன்பாய் பழகியவர்கள் பலர் அவனைக் குற்றவாளியைப் பார்ப்பது போல் பார்ப்பதாக அவன் உணர்ந்தான். இவர்களுக்கு என்ன நடந்தது என்று அவனால் புரிந்து கொள்ள முடியவில்லை.
இந்த சில நாள் பரபரப்பில் அவன் ராசாத்தியையும் அவள் கரிவிழிகளையும் சந்திக்க முடியவில்லை. அவன் மெல்ல செல்லம்மாவின் வீடு நோக்கி நடந்தான். செல்லம்மாக்காவிடம் விபரம் விசாரித்துக் கொண்டு அப்படியே ராசாத்தியையும் ஒரு பார்வை பார்த்துவிட வேண்டுமென்பது அவன் எண்ணம்.
செல்லம்மாவின் வீடு பதினாலாம் நம்பர் லயத்தில் வலது கோடியில் இருந்தது. அந்த லயம் சற்று பள்ளத்தில் இருந்ததால் தூரத்தில் ரோட்டு மேல் இருந்தே அதனை பார்க்க முடியும்.
அந்த வீடு அன்று வழக்கத்துக்கு மாறாக கலகலப்பாக இருந்தது. செல்லம்மாவின் மூத்த பெண் காமாட்க்ஷி புதுப் பொலிவுடன் காணப்பட்டாள். ராசாத்தியைத்தான் கண்ணிலேயே காணவில்லை.
""ராசாத்தியை எங்கே காண்ல'' என்று கேட்டான் சீனி.
""அது இனிமே வேலைக்கு வராது. மொதலாளிவூட்டு தம்பி கொழும்புல இருக்காக இல்ல. அவுக வூட்ல வேலைக்கு வுட்டிருக்கேன். நம்ம காமாட்சி கல்யாணத்துக்கு மொதலாளி ரெண்டாயிரம் ரூவா கொடுத்திருக்காரு. அப்புறம் நம்ம ஆளுங்க மொதலாளிகிட்ட பட்டிருக்கிற கடன் எல்லாம் தள்ளுபடி செஞ்சிட்டாங்கலாம். நாளைக்கி எல்லாத்தையும் வேலைக்கு வரச் சொல்லி கங்காணி வந்து சொல்லிவிட்டுப் போறாரு''
செல்லம்மா சொல்லச் சொல்ல சீனி பொறுமை இழந்தான். ""அப்படீன்னா நீங்கெல்லாம் நாளைக்கு வேலைக்குப் போகப் போறீங்களா?''
""ஆமா நீ கேக்கரதுல என்னா நாயம் இருக்கு சீனி. இப்பவே வூடுங்கல்ல சமைக்கிறதுக்கு அரிசி இல்லை''
அவள் தொடர்ந்து பேசியதைக் கேட்க சீனி அங்கிருக்கவில்லை. அவன் தன்னிடமிருந்த மிகப் பெரிய சொத்து ஒன்று பறி போய்விட்டது போல் உணர்ந்தான். முதன் முறையாக தான் பலவீனப்பட்டுவிட்டது போல் தோன்றியது.
அடுத்தநாள் காலை ஆறு மணி வழக்கம் போல் காவல்காரனின் மணிச்சத்தம் கேட்டது. எல்லோரும் பெரட்டுக்களம் செல்வதை உணர்ந்து சீனியும் என்ன செய்வது என்று தெரியாமலேயே எழுந்து சென்றான். எல்லோரும் வரிசையாக பெரட்டுக்களத்தில் அவரவர் இடத்தில் வரிசையாக நின்றிருந்தனர்.
மனேஜர் ஒவ்வொருவராகப் பெயர் கூப்பிட்டு அவரவர் எந்தெந்த மலைக்கு என்ன வேலைக்குச் செல்ல வேண்டுமென "பெரட்டுக் களைத்துக்' கொண்டிருந்தார். முதலாளி வந்திருக்கவில்லை.
சீனியின் முறை வந்தபோது அவன் பெயரை மனேஜர் கூப்பிடவில்லை. அவனை சற்றே ஏறிட்டுப் பார்த்தார். நிதானமாக அவர் வாயில் இருந்து சொற்கள் வெளிவந்தன.
""சீனிக்கு இனிமேல் வேலை கிடையாது. வேலை கொடுக்கக்கூடாது என்பது முதலாளியின் உத்தரவு''
சீனி மனேஜரை சற்று நேரம் முறைத்துப் பார்த்தான். பின்னர் அவ்விடத்தில் இருந்து வெளியேறினான். இந்த இடத்துக்கு தான் இப்போது வந்தே இருக்கக்கூடாது என்பது மட்டும் அவன் மனதில் உறைத்தது.
சீனி தன்னந்தனியனாய் நடந்தான். இதுவரை உணர்ந்தறியாத ஒரு தனிமை உணர்வு அவனை பீடித்திருந்தது. அவன் கால்கள் தளர்ந்தபோது எதிரில் காணப்பட்டது அந்த பாழடைந்த அம்மன் கோயில். அவனுக்கு அப்போதைக்கு ஆறுதலளிக்கக் கூடியது அது ஒன்றுதான்.
(யாவும் கற்பனை)