வேலூரில் கண்டி மன்னர் பரம்பரை-01
கண்டி மன்னன் ராஜசிங்கன் சிறை வைக்கப்பட்டிருந்த இடம்
-மணி ஸ்ரீகாந்தன்-
சென்னையிலிருந்து நூற்றி நாற்பது கிலோமீட்டரை பெங்களுர் அதிவேக பாதையின் ஊடாக கடந்தால் வேலூரை சென்றடையலாம். கடுமையாக வெயில் காயும் இடம் என்பதால் வெயிலூர் தான் வேலூர் ஆனது என்றும்
ஸ்ரீ விக்கிரம ராஜசிங்கன் |
மன்னர் சிறைவைக்கப் பட்ட வேலூர் கோட்டை |
நம் நாட்டை சேர்ந்தவர்கள் வேலூருக்கு சென்றால் இவ்விரு இடங்களையும் பார்க்கத் தவறுவதில்லை. அன்மையில் சென்னையில் உள்ள நமது இலங்கை துணைத்தூதரகத்தின் தூதரக செயலாளர் அந்தபாங்கொடை உள்ளிட்ட அதிகாரிகள் குழு மன்னரின் கல்லறையை பார்வையிட்டு திரும்பியிருக்கிறது. நம் நாட்டு அதிகாரிகளின் இந்த வருகையை ஒழுங்கு செய்தவர் 'அரண்மனை' வசந்த குமார். இவர் யாழ்ப்பாணம் ஊர்காவற்துறையை சேர்ந்தவர் நம் நாட்டின் பழைய கலைஞர். கடந்த இருபதாண்டுகளுக்கு மேலாக வேலூரில் வசித்து வரும் இவர் வடாற்காடு மாவட்ட பன்னாட்டு தமிழுறவு மன்ற அமைப்பாளராகவும் சமூக நல தொடர்பு மைய இயக்குனராகவும் பணியாற்றி வருகிறார்.
வசந்த குமார் |
“நம் நாட்டு மன்னரின் கல்லறையில் சில பணிகளை செய்வதற்கு எனக்கும் ஒரு சந்தர்ப்பம் கிடைத்ததற்காக மகிழ்ச்சியடைகின்றேன். இங்கே கடந்த இருபது ஆண்டுகளாக முத்து மண்டப காப்பாளராக பணியாற்றி வரும் முனியம்மாவுக்கு குறைந்த ஊதியமான நூற்று ஐம்பது ரூபாய் தான் கிடைத்து வந்தது. எனது அழைப்பை ஏற்று அ.தி.மு.க அமைச்சர் விஜய் அன்மையில் முத்து மண்டபத்தை பார்வையிட்டதோடு மண்டப காப்பாளர் முனியம்மாவிற்கு இரண்டாயிரம் ரூபா ஊதிய உயர்வை பெற்று தருவதாக வாக்குறுதி வழங்கியிருக்கிறார். விரைவில் விக்கிரம ராஜசிங்கனின் அறக்கட்டளையை தொடங்கி அதில் கிடைக்கும் நிதியில் வேலூரில் மன்னரின் சிலை அமைக்கும் பணியை தொடங்க இருக்கின்றோம்" என்று 'அரண்மனை' வசந்தகுமார் எம்மிடம் தெரிவித்தார்.
முத்து மண்டபம் |
பண்ணிரெண்டு இதழ்களை கொண்ட தாமரைப்பூவின் நடுவில் முத்து இருப்பது போல காட்சியளிக்கும் முத்து மண்டபம் கலைஞரின் ஆட்சிக்காலத்தில் 1990 ஆம் ஆண்டில் கட்டப்பட்டதாகும். மன்னர் சிறை வைக்கப்பட்டிருந்த வேலூர் கோட்டை, 16ஆம் நூற்றாண்டில் சின்ன பொம்மி நாயக்கர் என்ற தெலுங்கு நாயக்க மன்னரால் கட்டப்பட்டதாகும். கோட்டையை சுற்றிலும் கருங்கற் சுவர் எழுப்பப்பட்டதோடு கோட்டையை சுற்றிலும் எட்டாயிரம் அடி நீளமான அகழியும் அமைந்துள்ளது. 20 அடி முதல் 100 அடி வரை ஆழம்கொண்டதாக இந்த அகழி காணப்படுகிறது. பொம்மி நாயக்கருக்கு பிறகு இந்தக்கோட்டை ஆற்காட்டு நவாப்புகளின் வசமானது.
மன்னர் குடும்பத்து கல்லறைகள் |
முன்னர் கோட்டையில் சங்கிலியால் பிணைக்கப்பட்டிருந்த இழுவைப்பாலமே இருந்ததாம். பிறகு 18 ஆம் நூற்றாண்டில் ஆங்கிலேயரால் இது கல் பாலமாக மாற்றப்பட்டது. இந்தியாவின் முதல் சிப்பாய் கலகம் 1806 ஆம் ஆண்டில் தொடங்கியதே இந்தக்கோட்டையில் தான்.
கோட்டை வளாகத்தினுள் அரசு அருங்காட்சியகம் உள்ளது. இதில் கண்டி மன்னன் பாவித்த சில பொருட்களும் காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளன. இது தவிர மாவட்ட பதிவாளர் திணைக்களம், காவலர் பயிற்சிப்பள்ளி, ஆற்காட்டு நவாப்புகள் கட்டிய பள்ளி வாசல், பிரிட்டிஷ் கால கிறிஸ்தவ தேவாலயம், சின்ன பொம்மி நாயக்கர் கட்டிய பிரமாண்டமான ஜலகண்டேஸ்வரர் திருக்கோயில், திருவள்ளுவர் பல்கலைக்கழகம் ஆகியவை கோட்டைக்குள் உள்ளன. கடந்த சில ஆண்டுகள் வரை, வேலூர் மாவட்ட நீதிமன்றம், கலக்டர் அலுவலகம், இலங்கை அகதிகள் முகாம் ஆகியவை இங்கேயே இயங்கி வந்தன. தற்போது அவை வேலூரின் வேறு இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளன. முக்கியமாக ராஜீவ் கொலைக்குற்றவாளிகளான சின்ன சாந்தன், முருகன், நளினி, பேரறிவாளன் ஆகியோர் இங்கு தான் சிறை வைக்கப்பட்டிருந்தார்கள். ஆனால் 1995 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15ம் திகதி கோட்டை சிறையிலிருந்து 43 விடுதலைப்புலிகள் 152 அடி தூரத்திற்கு சுரங்கம் அமைத்து தப்பி சென்றதன் பின், ராஜீவ் கொலையுடன் சம்பந்தப்பட்ட கைதிகள், வேலூர் தொரப்பாடி மத்திய சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார்கள்.
1815 இல் ஆங்கிலேயரிடம் கண்டி இராச்சியம் வீழ்ச்சியடைந்த பின் கண்டி மன்னர் ராஜசிங்கன் கைது செய்யப்பட்டார். பின்னர் கொழும்புக்கு அழைத்து வரப்பட்டு சிலிங்கோ கட்டிடத்திற்கு அருகில் இருந்த ஒரு கட்டடத்தில் அவர் சிறை வைக்கப்பட்டிருக்கிறார். அங்கே சில மாதங்கள் கழிந்த பின் 1816ஆம் ஆண்டு ஜனவரி 24ஆம் திகதி மன்னரும் அவரின் துணைவியார்கள் நான்கு பேரும் கொழும்பு கோல்பேசிலிருந்து ‘கோர்ஸ்வலிஸ்’ என்ற கப்பல் மூலமாக சென்னைக்கு அழைத்து செல்லப்பட்டிருக்கிறார்கள். அப்போது அந்தக்கப்பலில் மன்னருடன் ஒரு ஆங்கில அதிகாரியும் உடன் சென்றிருக்கிறார். அவர் பெயர் ‘வில்லியம் கிரண்வில்’ இவர் மன்னருடன் கப்பலில் சென்ற அனுபவங்களை ஒரு புத்தகமாகவும் எழுதியிருக்கிறார்.
சென்னையை சென்றடைந்த மன்னன் பின்னர் வேலூர் கோட்டைக்கு அழைத்துச்செல்லப்பட்டு சிறை வைக்கப்பட்டிருக்கிறார். மன்னர் சிறை வைக்கப்பட்ட அந்தக் கட்டடத்தில் தான் தற்போதைய வேலூர் மாவட்ட (ரிஜிஸ்டர் அலுவலகம்) பதிவாளர் திணைக்களம் செயற்பட்டு வருகிறது.
மன்னர் சிறைவைக்கப் பட்ட இடம் (ரிஜிஸ்டர் ஆபிஸ்.வேலூர்) |
இந்தப் பதிவாளர் திணைக்களம் இரண்டு மாடிகளை கொண்டிருக்கிறது. அதில் கோப்புகள் வைக்கப்பட்டிருக்கும் களஞ்சிய அறைதான் அந்தக்காலத்தில் சிறைக்கூடமாக செயற்பட்டிருக்கிறது. அந்த அறையின் நீளம் 30 அடியாகவும் அகலம் 20 அடியாகவும் காணப்படுகிறது.
அந்த அறையில் தான் பதினெட்டு ஆண்டுகளை மன்னன் கழித்திருக்கிறார். மன்னரின் சிறை வாசத்தின் போது அவருடன் இரண்டு மனைவி மார் உடன் இருந்திருக்கிறார்கள். இலங்கையில் இருந்து கப்பலில் இந்தியாவுக்கு வரும்போது மன்னரின் ஒரு மனைவி கப்பலிலேயே இறந்து விட்டார். மன்னரின் சிறை வாழ்க்கையில் மன்னரின் மனைவி வெங்கட ரெங்கம்மாள் சிறையிலேயே மூன்று பிள்ளைகளை பெற்றெடுத்திருக்கிறார். பிறகு மன்னர் 1834 ஜனவரி 30 ஆம் திகதி அன்று தனது 53 வது வயதில் சிறையிலேயே மரணமாகி விட அவரின் இறுதிக்கிரியைகளை வேலூர் பாலாற்றங்கரையில் நடாத்தியிருக்கிறார்கள். பிறகு மன்னருக்கு அந்த இடத்தில் ஒரு கல்லறையை அமைத்திருக்கிறார்கள். மன்னரின் மரணத்திற்கு பிறகு அவரின் துணைவியரை ஆங்கிலேய அரசு விடுதலை செய்துவிட்டது. வேலூர் தோட்டப்பாலையத்தில் காணி பெற்று குடியமர்த்தியிருக்கிறார்கள்;
இது தவிர மன்னர் கைது செய்யப்பட்ட நாளிலிருந்து இலங்கை சுதந்திரத்திற்கு பின்னரும் சில வருடங்கள் வரை மன்னர் குடும்பத்திற்கான மானியத்தொகை இங்கிருந்து முறையாக அனுப்பப்பட்டு வந்திருக்கிறது. அந்தக்காலத்தில் வேலூர் மாவட்டத்தில் அரசுக்கு வரி கட்டிய குடும்பங்களில் கண்டி மன்னரின் குடும்பமும் அடங்கும். பிறகு ஏற்பட்ட அரசியல் மாற்றங்கள் காரணமாக இந்த ராஜகுடும்பத்தின் ராஜ யோகம் பறிபோய் வறுமையில் தள்ளாடத்தொடங்கியதோடு மன்னரின் வாரிசுகள் இந்தியாவின் மூலை முடுக்குகளுக்கு இடம்பெய்ந்தார்கள். இன்று மன்னரின் வாரிசாக விளங்கும் பிருத்விராஜன் வேலூர் ஸ்ரீநிவாசா தியேட்டரில் டிக்கட் கிழிக்கிறார். மற்றவர்கள் சென்னை, பெங்களுர், திருப்பதி உள்ளிட்ட இடங்களில் வசித்து வருகிறார்கள்.
(இன்னும் வரும்)
1 comment: