![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhmDhxTeJ_y5qygvayOES5nqP-lA_V3xeAE5rc5A_jSo6sgyL8YPx7hMCNNkwh7h7umdn_bhwBg8UKYdC3CojVY1549St7ZCX15rI1qapk35_SQHZEIBUrvw3Mfk6uOe6uRnvKzBZfZcUuZ/s320/138-The-plantation-Tamils-435x552.jpg)
இலங்கையின் முதலாவது தொழில் சட்டமென வர்ணிக்கப்பட்ட மேற்படி சட்டமானது சட்டம் பற்றி ஒன்றும் தெரியாத கூலித் தொழிலாளரை மிக வன்மையாகப் பாதித்தது. மறுபுறத்தில் சட்டம் பற்றி நன்கு அறிந்திருந்த முதலாளிமாரும் துரைமாரும் மிக இலகுவில் சட்டத்தின் பிடியில் இருந்து தப்பிக் கொண்டனர். மேற்படி சட்டத்தை மீறினார்கள் (ஒப்பந்த மீறல்) என்று மாவட்ட நீதிமன்றத்தில் தீர்மானிக்கப்பட்டால் அவர்கள் தண்டப்பணம் செலுத்துவதற்கும், வேலை இழப்புக்கும் மூன்று மாத சிறைத் தண்டனைக்கும் உட்படுத்தப்பட்டனர்.
ஒப்பந்தமீறல், கூலி வழங்கப்படாமை, ஒழுக்க மீறல் என்பவற்றுக்காக தொழிலாளர் எஜமானர் மீது வழக்குக் கொண்டு வர முடியுமெனினும் அவ்விதம் நிகழ்ந்ததற்கான எந்தவித பதிவுகளும் இல்லை. அப்படியே கொண்டு வந்தாலும் தண்டப் பணம் செலுத்தி தப்பி விட சட்டத்தில் ஏற்பாடிருந்த போதும் சிறைத்தண்டனை விதிக்க சட்ட ஏற்பாடு இருக்கவில்லை. இக்காலத்தில் இங்கிலாந்திலும் இதேவித தொழில் சட்டம் நடைமுறையில் இருந்தது. அச்சட்டத்தின்படி ஒப்பந்தத்தை மீறியது தொழிலாளியாயின் அவர் குற்றவியல் நீதிமன்றத்திலும் (Criminal Court) ) ஒப்பந்தத்தை மீறியது எஜமானாயின் அவர் குடியியல் நீதிமன்றத்திலும் (Civil Court) விசாரிக்கப்பட்டமை இங்கு குறிப்பிடத்தக்கது. ஏனெனில் சிவில் நீதிமன்றுக்கு தண்டிக்கும் அதிகாரம் கிடையாது. நட்டஈடு மட்டுமே பெற்றுக் கொடுக்க முடியும். இலங்கையிலும் இச்சட்டம் எஜமானருக்கு சார்பானதாகவே இருந்தது.
துரைமார்கள் பணமும் அதிகாரமும் அதேசமயம் ஸ்தாபனப்படுத்தப்பட்டும் இருந்ததுடன் கூலிகள் உதிரிகளாக, அதிகாரமற்ற அடிமைகளாக இருந்தனர். எனவே இச்சட்டம் அதிகாரிகளுக்கு வழங்கப்பட்ட இன்னொரு சாட்டையாகவே இருந்தது. சட்டம் ஒன்று இல்லாத நிலையில் தொழிலாளர் ஏதும் பிரச்சினையின் போது தோட்டத்தில் இருந்து ஓடித் தப்புவதையே ஒரே ஒரு பரிகாரமாகக் கொண்டிருந்தனர். எனினும் அவ்விதம் அவசரமாக வெளியேறும் போதும் தனக்கு கிடைக்க வேண்டிய நியாயமான கொடுப்பனவுகளையும் கைவிட்டே சென்றனர்.
மேற்படி தொழிற்சட்டத்தில் பல்வேறு குறைபாடுகள் காணப்பட்ட போதும் 1841 முதல் 1865 வரை எந்தவித பெரிய மாற்றங்களோ புதிய சட்டங்களோ கொண்டு வரப்படவில்லை. 1845 ஆம் ஆண்டு 14 ஆம் இலக்க கட்டளைச் சட்டம் ஒன்று ஆக்கப்பட்ட போதும் அச்சட்டம் அரசாங்க திணைக்களங்களில் தொழில் புரிவோருக்கு மட்டும் ஏற்புடையதாக இருந்தது. இச்சட்டத்தின்படி ஒரு வேலையாளை மூன்று வருடத்துக்கென ஒப்பந்தம் செய்ய முடியும்.
இதனை விட 1853 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட வங்குரோத்து சட்டத்தின்படி வழங்கப்படாதிருந்த மூன்று மாதத்துக்கான கூலியை அல்லது பவுண் 30 துக்கு மேற்படாத ஒரு தொகையை தொழிலாளருக்கு செலுத்தும்படி எஜமானருக்கு ஆணையிட மாவட்ட நீதிமன்றுக்கு அதிகாரம் வழங்கப்பட்டது. 1858 ஆம் ஆண்டு ஏற்பட்ட ஒரு பிணக்கின் போது கங்காணி என்பவனை "கூலி' என்ற பதத்துக்குள் வரையறை செய்ய முடியுமா என்ற விவாதம் ஏற்பட்ட போது சம்பளம் தொடர்பான பிரச்சினையின் போது கங்காணியையும் கூலி என்றே கருத வேண்டுமென்று சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டது.
ஆரம்பத்தில் இருந்தே இலங்கைக்கு அழைத்து வரப்பட்ட தொழிலாளர்கள் கோப்பிப் பெருந்தோட்டங்களில் மட்டுமே வேலை செய்யவில்லை. அவர்கள் பெருந்தெருக்கள், ரயில் வீதிகள், பாலங்கள் மற்றும் நிர்மாணப் பணிகளிலும் ஈடுபடுத்தப்பட்டனர். எனவே இவர்களையும் மேற்படி சட்டத்தின் ஏற்பாடுகளுக்குள் கொண்டு வரும் விதத்தில் 1861 ஆம் ஆண்டு சட்ட சபையின் உப குழுவானது திருத்தம் ஒன்றை மேற்கொண்டது. 1863 ஆம் ஆண்டு கண்டி மாவட்ட நீதிபதி டிக்ஷன் (Dickson) அவர்களின் முன்னிலையில் கூலி தொடர்பான வழக்கொன்று விவாதத்துக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போது கோப்பித் தோட்டக் கூலிகள் "நாட் கூலிகளா?' மாதாந்த கூலிகளா?'' என்ற சந்தேகம் எழுப்பப்பட்டது. அவ்வழக்கில் இவர்கள் மாதாந்த கூலிகளாகவே கருதப்பட வேண்டுமென தீர்ப்பு வழங்கினார். எனினும் இத்தீர்ப்பினை உறுதி செய்யும்படி உயர் நீதிமன்றத்துக்குப் பாரப்படுத்தப்பட்டது.
இதனை உறுதி செய்து தீர்ப்பு வழங்கிய உயர் நீதிமன்றம் "கோப்பித் தொழிலாளர்கள் மாதாந்த அடிப்படையிலேயே ஒப்பந்தம் செய்யப்பட வேண்டுமென்றும் அல்லது இது தொடர்பில் ஒப்பந்த நிபந்தனைகளில் விசேட ஏற்பாடுகள் செய்திருக்க வேண்டுமென்றும் கூறி தீர்ப்பு வழங்கியது. எனினும் இவற்றால் எல்லாம் எஜமானருக்கன்றி கூலிகளுக்கு எந்தப் பாதுகாப்பையும் சட்டங்கள் வழங்கவில்லை.
மறுபுறத்தில் சட்டம், ஒழுங்கை பாதுகாக்க போதுமான பொலிஸ் உத்தியோகத்தர்கள் இருக்கவில்லை. நீண்ட தூர இடைவெளிகளுக்கு மத்தியில் ஓரிடத்தில் 12 சதுர அடிகள் மட்டுமே கொண்ட பொலிஸ் நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. இதில் ஒரு சார்ஜன்டும் நான்கு பொலிஸ்காரர்களும் கடமையாற்றினர். பொதுவாக தோட்டத்துரைமார்களுக்கு உத்தியோக பற்றற்ற சமாதான நீதிவான்கள் (Justice of Peace J.P) பதவிகள் வழங்கப்பட்டு கைது ஆணை பிறப்பிக்கும் அதிகாரம் வழங்கப்பட்டிருந்தது.
இந்த நிலைமை காரணமாக வேலையை விட்டு விலகிய கூலிகளையெல்லாம் பிடித்து சிறையில் அடைக்கும்படி மேற்சொன்ன உத்தியோகப் பற்றற்ற நீதிவான்கள் பொலிஸாருக்கு ஆணை பிறப்பித்தனர். பொலிஸ்காரர்கள் உண்மையான குற்றவியல் குற்றவாளிகளை விட்டு விட்டு நாளெல்லாம் வேலை விட்டு விலகியோடிய தொழிலாளர்களை பிடித்து வந்து பொலிஸ் நிலையத்தில் அடைத்து வைத்தனர். மலைநாட்டின் எல்லா சிறைகளிலும் ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் நிரம்பி வழிந்தனர். இந்த நிலைமையால் காலனித்துவ செயலாளர், ராணியின் சட்டத்தரணி, மாவட்ட நீதிபதிகள், துரைமார் சங்கம் ஆகியவற்றுக்கிடையில் இது தொடர்பில் காரசாரமான விவாதம் எழுந்தது.