அப்பா
======
======
அப்பா, அவருக்குக் கிடைத்த சிறிய சம்பளத்தில் அம்மாவுடன் இணைந்து எங்களது எல்லா தேவைகளையும் கவனித்துக் கொண்டதுடன் தான தர்மங்களும் செய்வார். அவர் தனக்கென்று எதனையும் செய்வதில்லை. போட்டி போட்டுக் கொண்டு போலிம்களில் முன்செல்ல முனைந்ததில்லை. பஸ்ஸிலோ, கோச்சியிலோ பயணம் செய்த போது தான் அமர்ந்திருக்கும் இருக்கையைக் கூட யாருக்காவது விட்டுக் கொடுத்து விடுவார். அவர் தனக்கென வைத்திருந்த ஒரே ஒரு பொருள் பழைய ஹம்பர் சைக்கிள். அதனையும் யாராவது இரவல் கேட்டால் கொடுத்து விட்டு தான் நடந்து செல்வார்.
அப்பாவுக்கு போட்ட சோற்றை அவர் முழுமையாக ஒரு போதும் சாப்பிட்டதில்லை. எங்கள் வாய்களிலும் இரண்டு இரண்டு பிடிகள் திணித்து விடுவார். போதாதற்கு நாயும் பூனையும் இரண்டு கவளம் பெற்றுக் கொள்ளும். தான் குடித்து விட்டு மிஞ்சிய நீரை வீணாக கீழே கொட்டமாட்டார். எழுந்து சென்று ஏதாவது செடிக்கு ஊற்றி விட்டு வருவார்.
அப்பா விடுமுறை கிடைத்த போதெல்லாம் வீட்டில் அம்மாவுக்கு உதவுவார். வீட்டைத் துடைத்து சுத்தப்படுத்துவார். குளியலறை, மலசலகூடம் சுத்தம் செய்தல், துணி துவைத்தல் எல்லாம் அவர் பணி. அப்பா சுவையாக சமைப்பார் என்ற போதும் அம்மாவின் சமையலையே அதிகம் சுவையென்பார். எங்களுக்குப் பாடஞ் சொல்லிக் கொடுப்பார். இரவில் ஊர்ப் பிள்ளைகளுக்கும் இலவசமாக இங்கிலீசு கற்றுக் கொடுப்பார். அதனால் எங்களூரில் எல்லோரும் ஷேக்ஸ்பியரை அறிந்து வைத்திருந்தனர்.
தோட்டத்து மரங்களில் மரங்களின் உச்சாணிக் கொம்புகளில் பழுக்கும் பழங்களை பிடுங்க மாட்டார். அவற்றை பறவைகளுக்கு பூஜை செய்வார். கல், தடி கொண்டு அவற்றுக்கு வீசுவதற்கு தடை விதித்தார். தோட்டத்தில் இருந்த ஏழு தென்னை மரங்களில் இரண்டை திருடர்களுக்கு ஒதுக்கினார். அவர்களும் கூட அவற்றில் அன்றி வேறு மரங்களில் கை வைக்க மாட்டார்கள்.
அப்பாவுக்கு அறுபத்து நான்கு கலைகளில் அரைவாசிக் கலைகள் தெரிந்திருந்தன. காயம் பட்டால், கையொடிந்தால், கால் முறிந்தால் கட்டுப் போட பத்துப் போட அவருக்குத் தெரியும். தடிமன், காய்ச்சல் தலைவலிக்கு கசாயம் காய்ச்சிக் கொடுப்பார். அம்மை போட்டால் வைசூரி கண்டால் அவரையே ஊறார் அழைத்துப் போவார்கள். நீர்க் குழாய் திருத்துதல், மின்சாரவயர் பொருத்துதல், கானு கக்கூசு உடைந்தால் கூரை வேய்தல் தொட்டது தொன்னூறுக்கும் ஊராருக்கு அப்பாதான் வேண்டும்.
அப்பா இவை எல்லாவற்றையும் செய்தது புண்ணியம் கிடைக்கும் என்றோ பிறர் மீதுள்ள அனுதாபத்தினாலோ அல்ல. ஒரு மனிதனின் கடமை அது என்றே அவர் கருதினார். இத்தகைய உதவி உபகாரங்களை செய்யும் போது பிறர் மனதில் கடன்பட்டுவிட்டோம் என்ற குற்ற உணர்வு ஏற்படாமல் இருக்கும் விதத்தில் கவனமுடன் இருப்பார். அப்பா இறுதி வரை புன்னகையுடனேயே வாழ்ந்தார். அவர் இறந்த பின்னரும் கூட அவர் முகத்தில் அந்த புன்னகை மாறாமல் இருந்தது.
இரா. சடகோபன்
================
================
No comments:
Post a Comment