மலையக இலக்கிய வரலாறு கூறும் கூலித் தமிழ்- மாதவி சிவலீலன்
லங்கையின் வருமான முதுகெலும்பைக் கட்டி நிமிர்த்திய தோட்டத் தொழிலாளர்களின் இலக்கிய முயற்சியை விமர்சித்து வரலாற்றுப் பதிவு செய்த சிறப்புறு நூலாக இந்தக் `கூலித் தமிழ்` நூல் விளங்குகின்றது. இலக்கிய விமர்சனங்கள் அடங்கிய கட்டுரைத் தொகுப்பினைத் துன்பியல் நாவல் ஒன்றை வாசிக்கும் மனோபாவத்துடன் வாசிப்பதற்குரிய தளத்தை இந்நூல் மூலம் மு. நித்தியானந்தன் எமக்குத் தந்திருக்கின்றார். இது மலையக மக்களின் வரலாற்று நூல், அந்த மக்களின் இலக்கியத்தைக் கூறும் நூல், அவர்களின் மொழி வரலாற்றைக் கூறும் நூல், அவர்தம் பண்பாடு வாழ்வியல் கூறும் நூல்.
இலக்கியங்கள் மீதும் அவற்றின் வரலாறுகள் மீதும் நித்தியானந்தன் மிகுந்த ஈடுபாடு கொண்டவர். அகராதிகளில் மிகவும் விருப்பமுடையவர். மொழிகளின் நுணுக்கங்களை உய்த்துணரும் ஆற்றல் மிக்கவர். ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வியல் நிலைப்பாடுகளை அக்கறையோடு அவதானிப்பவர். இவை யாவற்றோடும் அவருக்கிருக்கின்ற ஆங்கிலப்புலமையும் சேர்ந்து இந்தப் பெறுமதியான நூல் வரக் காரணமாகின. இது ஒன்றும் வியப்பான விடயமல்ல.
ஈழத்தில் இந்தியத் தமிழர் சார்ந்த முயற்சிகள் பற்றியதான ஏழு கட்டுரைகள் இங்கு இடம் பெற்றுள்ளன. அறியப்படாத விடயங்களை தகுந்த ஆதாரங்களுடன் பதிவு செய்திருக்கின்றார். மிகத் தெளிவானதும் ஆழமானதுமான முன்னுரையுடன் நூல் அமைந்திருக்கின்றது. வரலற்றுப் பதிவை எத்தகைய தேடலுடன் நேர்மையாகப் பதிய வேண்டுமென்பதில் கவனம் செலுத்தியிருக்கின்றார். The British Library, The School of Oriental and African Studies Libarary, என இவர் தேடல் விரிவடைந்து செல்கின்றது. எங்கெங்கு தகவல்கள் திரட்ட முடியுமோ அங்கெல்லாம் பெரு முயற்சியுடன் செயற்பட்டிருக்கின்றார். இதுதான் வரலாற்று ஆசிரியரொருவருடைய சீரிய பணியாக இருக்கும். இது போன்றே இந்நூலுக்கு மழவரையன் விஜயபாலன் எழுதிய அணிந்துரையும் சிறப்பைத் தந்துள்ளது.
00000
இலங்கை செல்ல விரும்புகின்ற கூலிகள் மண்டபம் முகாமில் மதுரைக் கம்பனி ஏஜென்டிடம் 52ரூபாயும் 10 அணாவும் வைப்புப் பணமாகச் செலுத்தியுள்ளனர். அவர்கள் இலங்கையில் தொடர்ந்து பதினெட்டு நாட்கள் வைத்தியரிடம் சென்றால் 50 ரூபா திருப்பிக் கொடுப்பார்கள். ஆனால் வைத்தியரிடம் சென்று வரும் தொல்லைகளினால் `தொலையட்டும்` எனக் கூறி இப்பணத்தை கூலிகள் பலர் திருப்பிப் பெறுவதில்லையெனக் கூறும் நித்தியானந்தன் அந்த 50ரூபாயை அட்டைப்படமாகப் போட்டிருக்கின்றமை மிகப் பொருத்தமுடையதாக அமைந்திருக்கின்றது.வயிற்றுப் பசிக்காக நம்பிக்கையோடு தமிழகத்தில் இருந்து வந்து, மலையகத்தில் மக்கள் பட்ட இன்னல்களை, படுக்கின்ற இன்னல்களை நூல் விரிவாகப் பதிவு செய்கின்றது.
`கோப்பி கிருக்ஷிக் கும்மி மலையகத்தின் முதல் நூல்’ ஆபிரகாம் ஜோசப் ஏபிரகாம் என்பவரால் எழுதியதாகும். தோட்டத்துரைமாரின் கைக்கூலியாகச் செயற்பட்ட ஜோசப் தன் நூலுக்கு வழங்கிய முன்னுரையில் தன்னுடைய ஈன நிலைப்பாட்டை எமக்குப் புடம் போட்டுக் காட்டியுள்ளார். அதிகாரவர்க்கத்துடன் இணைந்து செயற்படும் ஒவ்வொருவரும் தன்னின மக்களுக்குச் செய்கின்ற துரோகத்தின் பிரதிநிதிகளில் ஒருவராக ஜோசப்பைப் பார்க்க முடியும். நித்தியானந்தன் விமர்சனம் என்ற வகையில் இந்நூலுக்கு எதிராக மிகக் காட்டசாட்டமான விமர்சனத்தை வைத்துள்ளார். ஜோசப் காட்டும் மலைநாடு என்பது உண்மையல்ல; அம்மக்களின் இழிநிலை யதார்த்தம் மிகப் பரிதாபமானது என்பதைச் சுட்டிக் காட்டியுள்ளார்.
இவ்விடத்தில் மலையகத்தில் இருந்து வெளி வந்த `தீர்த்தக்கரை` எனும் சஞ்சிகை பற்றிக் குறிப்பிட வேண்டும். அன்று ஐந்து இதழ்கள் மட்டுமே வெளிவந்தன. அந்த இதழ்களில் மக்கள் வாய்மொழிப் பாடலை சி.வி வேலுப்பிள்ளை பதிவு செய்துள்ளார். அதிலொன்று பின்வருமாறு அமைக்கின்றது. “ரப்பரு மரமானேன் நாலுபக்க வாதுமானேன் இங்கிலீசுகாரனுக்கு ஏறிப் போக காருமானேன்“ இது தான் மலையக மக்களின் உண்மை நிலை. இத்தகைய பாடல்களை இந்நூலும் குறிப்பிடுகின்றது. இப்படிப் பல பாடல்கள் அவர்களின் வாய்மொழியாக அவர்தம் வாழ்வியல் சோகத்தையுணர்த்தும் போது இந்த நூலின் போலித்தன்மை உணரப்படுகின்றது.
ஜோசப்பின் இன்னொரு நூல் `தமிழ் வழிகாட்டி`; இது கூட தோட்டத் துரைமாருக்காகவும் ஆங்கில வர்த்தகர்களுக்காகவும் எழுதப்பட்டதாகும். இந்நூல் பற்றி நித்தியானந்தன் கூறும் போது, “ ஜோசப்பின் ஆங்கில, தமிழ்ப்புலமையை மட்டுமல்ல இலங்கையின் கோப்பி யுகத்தின் தோட்டத் துரைமாரது வாழ்க்கையின் குறுக்கு வெட்டுத் தோற்றத்தையும் நமக்குத் தருகின்றது“ எனக் குறிப்பிடுகின்றார். துரைக்கும் கூலிக்குமிடையில் நடக்கும் உரையாடல்கள் சுவாரசியமாக இங்கு அமைக்கப்பட்டு, அதனூடாக அவர்களுக்குத் தமிழ் போதிக்கப்பட்டுள்ளது.
`துரைத்தன அடக்குமுறையும் கூலித் தமிழும்` எனும் கட்டுரையில் மலையக மக்களின் அவலத்தின் இன்னொரு பக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. ஆங்கிலேயர் கற்ற தமிழ் மலையகத் தமிழரை அடக்குவதற்காகக் கற்கப்பட்ட தமிழாகக் கூறப்படுகின்றது. ஸ்கொட்லாந்தில் அபடீன் எனும் இடத்தில் கீழைத்தேய நாடுகளுக்கு வேலைவாய்ப்புத் தேடிச் செல்லும் வெள்ளையர்களுக்காகத் தனியார் தமிழ் வகுப்புகள் நடைபெற்றுள்ளன. “Tamil to be taught Course for those going east Aberdeen class arranged’’ என இதற்கான விளம்பரம் உள்ளூர்ப் பத்திரிகையில் அமைந்திருக்கின்றது. இது எமக்குத் தெரியாத புது விடயமாக இங்கு பதியப்பட்டுள்ளது.
`கருமுத்து தியாகராசர், இந்தியத் தமிழர்களுக்காகக் குரல் எழுப்பிய முதல் பத்திரிகையாளர்` என்கின்ற கட்டுரை இந்தியாவில் இருந்து இலங்கை வருகின்ற மக்கள் வழியில் அனுபவிக்கின்ற துயரங்களுக்கு எதிராக குரல் கொடுத்தவர் பற்றியதாக அமைந்துள்ளது. ஒரு செட்டியார், வியாபாரி, பொருளாதாரப் பலமிக்கவர் மக்களின் இழிநிலை கண்டு கொதித்தெழுந்த்திருக்கின்றார். எழுத்து இங்கு ஆயுதம் போன்று செயற்பட்டிருக்கின்றது. ஆரம்பத்தில் இவர் ‘The Ceylon Morning Leader’ பத்திரிகையின் நிருபராகப் பணியாற்றியுள்ளார். பின்னர், இலங்கையில் இந்தியத் தொழிலாளர், மண்டபம் நோய் தடுப்பு முகாம், இந்தியத் தொழிலாளர் பிரச்சினை போன்றவை சம்பந்தமாகப் பிரசுரங்களை அச்சடித்து வெளியிட்டுள்ளார்.
மண்டப முகாம் கஷ்டங்கள் பார்க்கும் போது சாதாரண ஏழைத் தொழிலாளிகள் உடல் ரீதியாகவும் உளரீதியாகவும் அங்கு வருத்தப்பட்ட நிலையை உணரமுடிக்கின்றது. உடைகள் களைந்து தொற்று நோய்கள் நீக்கப்படுவதும் நெஞ்சில் சூடு போடுதலும் ஆயிரம் பேர் தங்கும் இடத்தில் நாலாயிரம் பேரைத் தங்க வைத்தலும் உணவின்றித் துயர்படுதலும் இங்கு பதிவுகளாகின்றன. அந்த வாழ்வின் அவலம் எப்போதும் வலி பொருந்தியதாக விளங்கி நெஞ்சை வருத்துகின்றது. கலகக் குரலாக ஒலித்த பத்திரிகைக்காரனின் எழுத்து எவ்வளவு வலிமைமிக்கது என்பதுவும் இங்கு புலப்படுத்தப்பட்டுள்ளது.
ஆங்கிலேயர் வருகையுடன் தமிழுக்கு அறிமுகமாகிய நாவல் இலக்கிய வடிவம் ஆரம்பத்தில் தமிழ் நாட்டையே களமாகக் கொண்டு ஆக்கப்பட்டிருந்தது. அந்த வகையிலேயே ஆ. போல் எழுதிய `சுந்தரமீனாள் அல்லது காதலின் வெற்றி ` எனும் மலையகத்தின் முதல் நாவலும் தமிழ்நாட்டு மண்ணைக் களமாகக் கொண்டு எழுதப்பட்ட நாவலாக விளங்குகின்றது. துரதிக்ஷ்டமாக மலையக மக்கள் வாழ்வை இந்நாவல் பிரதிபலிக்காமல் உருவாக்கப்பட்டிருக்கின்றது.
ஜி.எஸ்.எம்.சாமுவேல் எழுதிய நாவல் கண்ணனின் காதலி. அதியற்புதக் கற்பனையும் யதார்த்தமும் நிறைந்த இந்நூலில் மலையக மக்கள் வாழ்வைக் காண முடிகின்றதென நித்தியானந்தன் குறிப்பிடுகின்றார். சமுக ஏற்றத் தாழ்வு, சாதியக் கொடுமை, பாலியல் தொல்லை, மலையகத் தோட்ட வாழ்வின் அவலம், காந்தியம் போன்ற பல்வேறு விடயங்களை இந்நாவல் விபரிக்கின்றது. அந்த வகையில் ஈழத்து இலக்கிய வரலாற்றிலும் மலையக இலக்கிய வரலாற்றிலும் முக்கியத்துவம் பெறுகின்றது.
`அஞ்சுகம்; மலையக இலக்கியத்தின் முதல் பெண் ஆளுமை` எனும் தலைப்பில் ஒரு கட்டுரை இடம்பெற்றிருக்கின்றது. பணம் சம்பாதிப்பதற்காக இந்தியாவிலிருந்து வந்தவர்களெனும் ரீதியில் அஞ்சுகமென்ற கணிகையர் குலப் பெண்ணையும் அவளது எழுத்தாக்கமாகிய உருத்திர கணிகையர் கதாசாரத் திரட்டு எனும் நூலையும் கூலித் தமிழ் நூலுக்குள் நித்தியானந்தன் பொருத்திப் பார்க்கின்றார். அஞ்சுகத்தின் நூல் ஒரு வரலாற்று நூலாக விளங்குகின்றது.
இதற்கு முன்னர் யாழ்ப்பாணத்தில் நட்டுவச் சுப்பையனார் எழுதிய `கனகி புராணம்` வண்ணார்பண்னை சிவன் கோவில் தாசி கனகி பற்றியதானதாக அமைந்துள்ளது. இது சமுகத்தில் உயர் ஸ்தானத்தில் இருப்போர்களும் சாதியம் பேசுகின்றவர்களும் இவளிடம் சென்று வருவதாக எழுதப்பட்ட காரணத்தால் திட்டமிட்டுப் பல பாடல்கள் அழிக்கப்பட்டன. இன்று ஒரு சில பாடல்களே மிஞ்சியுள்ளன.
கணிகையர் குலப்பெண்கள் ஏனைய குலப்பெண்களை விட ஆளுமை மிகுதியானவர்கள் என்பதுவும் கல்வியறிவும் கலையறிவும் கொண்டவர்கள் என்பது நாம் வரலாறுகள் மூலம் தெரிந்து கொண்டவையே. அவற்றைப் பறை சாற்றும் வகையில் அஞ்சுகமும் தனது தமிழறிவு, கல்வியறிவு சமயவறிவு என்பவை துலங்கும் வகையில் தன் நூலை ஆக்கியுள்ளாரெனக் குறிப்பிடும் நித்தியானந்தன் இவர் பற்றி மிக அருமையான கட்டுரை எழுதியுள்ளார்.
இங்கு இடம் பெற்றுள்ள கட்டுரைகளிலும் ,நாவல்களிலும் பெண்கள் ஆளுமைமிகு பெண்களாகச் சித்திரிக்கப்பட்டுள்ளமை மேலும் சிறப்புறு அம்சமாகும். மலையக மக்களின் வலி மிகுந்த பக்கங்கள் இங்கு வலிமையுடன் பேசப்பட்டுள்ளது. வஞ்சிக்கப்பட்ட இனத்தின் வரலாற்றை நித்தியானந்தன் அவர்கள் பதிவு செய்ததன் மூலம் எப்போதும் பேசப்படும் நூலாகக் கூலித் தமிழ் விளங்கும்
No comments:
Post a Comment